நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு ரூ.4.75 லட்சம் செலுத்த கோரியதை கண்டித்து மறியல்: 50-க்கும் மேற்பட்டோர் கைது


சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை பெற ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் செலுத்தக் கோரியதைக் கண்டித்து சூளை பகுதியில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் மேற்கு பகுதியில் உள்ள ராஜா முத்தையா சாலையோரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 68 குடும்பங்கள் வசித்து வந்தன. இக்குடும்பங்கள் கடந்த 2002-ம் ஆண்டு அகற்றப்பட்டு, எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூளை, கண்ணப்பர் திடல் அருகில் உள்ள மாநகராட்சியின் கைவிடப்பட்ட வீடற்றோர் காப்பகக் கட்டிடத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டனர்.

அப்போதே, அவர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வால்டாக்ஸ் சாலை, ஜட்காபுரம் பகுதியில் வீடுகள் வழங்கப்படும் என அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் 22 ஆண்டுகளில் அக்குடும்பங்கள் 108 ஆக பெருகிவிட்டன. இதனால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான செய்தி, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளியானது.

அதன் அடிப்படையில் அவர்களுக்குச் சென்னை மாநகருக்கு உள்ளேயே வீடுகள் பெற்றுத்தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மொத்தம் 108பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பயோமெட்ரிக்பதிவும் செய்யப்பட்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில் அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு வழங்குவதாகக் கூறிபயனாளிகளை நேற்று காலைகண்ணப்பர் திடல் பகுதிக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் வரவழைத்துள்ளனர். வங்கி அதிகாரிகளையும் அங்கு வரவழைத்திருந்தனர்.

அப்போது, வீடு ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சூளை, கண்ணப்பர் திடல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வாவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிய நிலையில், அவரை விடுவிக்குமாறு பொதுமக்கள் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்ப்பாக்கம் காவல் சரக துணைஆணையர் ரகுபதி தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து, பின்னர் மாலையில் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக பயனாளி செல்வம் கூறும்போது, ``எங்களுக்கு மூலக்கொத்தளம் திட்டப் பகுதியில் வீடுகள் ஒதுக்க இருப்பதாகவும், வீடு ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் செலுத்தவேண்டும் என்றும் வாரியம் கூறியுள்ளது.

இதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை உடனே செலுத்த வேண்டும். மீதத் தொகையை வங்கிக் கடனாக பெற்றுக் கொள்ளலாம். அதை 10 ஆண்டுகளில் மாதம் ரூ.6 ஆயிரத்து 500 வீதம் தவணை முறையில் செலுத்தலாம் என்று தெரிவித்தனர்.

இதன் பிறகு மின்சாரக் கட்டணம்,குடிநீர் கட்டணம், வளாக பராமரிப்புக் கட்டணம் என ஏகப்பட்ட செலவுகள் உள்ளன. எங்களால் அவ்வளவு தொகையை செலுத்தமுடியாது. எனவே நீர்வழித்தடங்களின் கரையோரம் வசித்தவர்களுக்கு அளித்தவாறு இலவசமாக வீடு வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டோம்'' என்றார்.

x