காங்கிரஸ் கட்சியில் இணையும் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி... மக்களவை தேர்தலில் போட்டி!


பி.கே.ரவி

தமிழ்நாடு முன்னாள் டிஜிபி பி.கே.ரவி காங்கிரஸில் கட்சியில் இன்று இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பணியாற்றி வந்த பிரஜ் கிஷோர் ரவி என்ற பி.கே.ரவி, அண்மையில் விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 1989-ம் ஆண்டு பேட்ஜைச் சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான பி.கே.ரவி, மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் இடம் பெற்றிருந்தார். மாநில டிஜிபிக்கான ரேஸில் முதலிடத்தில் சஞ்சய் அரோராவும், 2 ம் இடத்தில் ரவியும் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் அவருக்கு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டு தீயணைப்புத் துறை டிஜிபியாக பணியாற்றி வந்த பி.கே.ரவியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இத்தகைய சூழலில் பதவிக்காலம் முடிவடைய 3 மாதங்களே உள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறுவதாக ரவி அறிவித்தார்.

பி.கே.ரவி

ஓய்வுக்குப்பிறகு, அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து அவர் கட்சியில் இன்று இணைகிறார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் சொந்த ஊரான பீகாரில் அவர் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த உத்தரவாதத்தின் பேரிலேயே அவர் கட்சியில் இணைந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஓய்வு பெற்ற டிஜிபி கருணாசாகர், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் வழியில் மற்றொரு போலீஸ் அதிகாரியும் அரசியலில் குதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!

x