விஷவாயு மரணம்: ஆவடியில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் ஆய்வு


தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்: ஆவடியில் ஒப்பந்த ஊழியர் விஷவாயு தாக்கி உயிரிழந்த பாதாளச் சாக்கடை பகுதியில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் இன்று (வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட, ஜெ.பி.எஸ்டேட்- சரஸ்வதி நகர் பகுதியில் கடந்த 11-ம் தேதி பாதாளச் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை அகற்றும் பணியில், ஒப்பந்த ஊழியரான கோபி ஈடுபட்டார். அப்போது, அவர் திடீரென மயங்கி பாதாளச் சாக்கடையினுள் விழுந்ததில் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆவடி போலீஸார், ஒப்பந்த நிறுவன மேலாளர் ரவி, மேற்பார்வையாளர் ஆனந்த் பாபு ஆகிய இருவரை கைது செய்தனர்.

தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனம் தரப்பிலான நிவாரணம், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசின் நிவாரணம், தூய்மை பணியாளர் நல வாரியம் சார்பிலான நிவாரணம் என, ரூ.41 லட்சம் கோபியின் மனைவி தீபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தீபாவுக்கு இளநிலை உதவியாளர் பணியையும் அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில், தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆவடியில் விஷவாயு தாக்கி கோபி உயிரிழந்த பாதாளச் சாக்கடை பகுதியை இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அவர் கோபியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பிறகு, ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வெங்கடேசன் பங்கேற்று, ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், பாதுகாப்பு உபகரணங்கள், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவை குறித்து, தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர், தனியார் ஒப்பந்த நிறுவனம், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் சீருடை, ஷு உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும், மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்ததாவது: “இந்தியாவிலேயே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படுவது என்பது தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது. கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் 258 பேர், கழிவுநீர் தொட்டியை தூய்மை செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழ்நாடு மிகவும் அஜாக்கிரதையாக உள்ளது. உயிரிழப்புகளை தடுக்க கழிவுநீர் தொட்டிகளை தூய்மை செய்ய இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

ஆகவே, அந்த இயந்திரங்களை தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து பெற்றுத் தருவதாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடைபெற்ற ஆய்வு கூட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். ஆனால், அது குறித்து தமிழகத்தில் இருந்து எந்த ஒரு கோரிக்கையும் வைக்கப்படவில்லை” என்றார். .இந்த நிகழ்வுகளின் போது, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்வராணி, தாட்கோ மேலாளர் இந்திரா, ஆவடி வட்டாட்சியர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x