அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்திருக்கும் அமலாக்கத்துறையின் அதிரடியால் கொதித்துப் போயிருக்கிறது திமுக முகாம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகையை அடுத்து இந்தக் கைது நடக்கவும், அதையும் இதையும் முடிச்சிட்டும் செய்திகள் வலம் வருகின்றன.
அதேசமயம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கதையாக, முந்தைய நாள் அதிமுக - அண்ணாமலை மோதலை பிரதானமாகப் பேசி வந்த ஊடகங்களை அடுத்த நாளில் அப்படியே செந்தில் பாலாஜி பக்கம் தாவ வைத்துவிட்டது அமலாக்கத்துறையின் இந்த அதிரடி கைது நடவடிக்கை!
செந்தில் பாலாஜி கைதுக்குக் காரணமான குற்றச்சாட்டுகள் அதிமுக ஆட்சிக் காலத்தவை என்றாலும், அவருக்கு எதிரான ஆக்ஷனுக்காக அதிமுகவும் இப்போது மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குகிறது.
கடந்த 13-ம் தேதி செந்தில் பாலாஜியின் வீட்டுக்குள் அமலாக்கத்துறை அடி எடுத்துவைத்த நேரத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அண்ணாமலை விஷயம் குறித்து பேசுவதற்காக நாம் தொடர்பு கொண்டபோது, “அது விஷயமாக இப்போதைக்கு ஏதும் பேசவேண்டாம் என்று எடப்பாடியார் சொல்லி இருக்கிறார்” என்று மௌனமானார். முந்தைய நாள், “பாஜக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும்” என்று சீறிய ஜெயக்குமாருக்கு ஏன் இந்த வாய்ப்பூட்டு என்று அப்போதென்னவோ சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அந்தவகையில், ஒரே ஆக்ஷனில் திமுகவுக்கும் கிலியை கொடுத்து அதிமுக - அண்ணாமலை மோதலுக்கும் அணை போட்டிருக்கிறது அமலாக்கத்துறை.
முன்னதாக, செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோத பண பரிமாற்றக் குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இருப்பதாகச் சொன்ன உச்ச நீதிமன்றம், “தமிழக அரசு இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று புத்தி சொன்னது. ஆனால், அப்படியான விசாரணை ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. அதற்காக அமலாக்கத் துறை சும்மா இருக்கவில்லை. செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட ஆதி அந்தங்களை அடிமட்டம் வரைக்கும் போய் ஆய்ந்தது. அதன் இறுதிக்கட்டம் தான் கைது நடவடிக்கை.
“இது, ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது சகாக்களும் கோபப்படுகிறார்கள். முதல்வர் இதற்கென ஒரு பதிவு செய்யப்பட்ட வீடியோ விளக்க உரையே வெளியிட்டிருக்கிறார். அதில், ”திமுக திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்” என்று சீற்றம் காட்டி, ஆ.ராசா, கனிமொழி கைதுகளின் போதுகூட இல்லாத ஒரு ஆவேசத்தில் தாங்கள் இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதேசமயம், செந்தில் பாலாஜி திமுக-வில் ஐக்கியம் ஆவதற்கு முன்பாக, அவருக்கு எதிராக மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய அனல் தெறிக்கும் பிரச்சார உரையை அண்ணாமலையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
“இப்போது நடந்திருப்பது பாஜக-வின் அரசியல் பழிவாங்கல் என்றால்... முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கும் விஜயபாஸ்கர் வீட்டுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையை தமிழக அரசு அனுப்பியது எதில் சேரும்?” என்று அதிமுகவினர் அர்த்தமாய்க் கேட்கிறார்கள். ”இத்தகைய குற்றச்சாட்டுகளுக்காகத்தானே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஒரு காலத்தில் ஸ்டாலின் கேட்டார். அப்போது அவர் கேட்டதை இப்போது மத்திய அரசு செய்தால், அது எப்படி அரசியல் பழிவாங்கலாகும்?” என்று பாஜக தரப்பும் கேட்கிறது.
கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சியைத் தக்கவைத்திருந்த காலத்தில்கூட நிம்மதியாக நாட்களை நகர்த்தியது திமுக. அப்போது ஜெயலலிதா மட்டும் தான், ”மைனாரிட்டி திமுக அரசு... மைனாரிட்டி திமுக அரசு” என்று திமுகவை மூச்சுக்கு முந்நூறு முறை சீண்டிக் கொண்டிருந்தார். ஆனால், மத்தியில் அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்ததால் ஜெயலலிதாவின் பேச்சை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை அப்போதைய முதல்வர் கருணாநிதி. ஆனால் இப்போது, தனிப் பெரும்பான்மையுடன் கெத்தாக ஆட்சியில் இருந்தும் திமுக தலைவர்களால் அமைதியாக ஆட்சி நடத்த முடியவில்லை.
இப்போது அடிக்கடி ஆடியோ ஆதாரம் என்று பதிவுகள் வெளியாவதால், அமைச்சர்கள் பலர் போனில் பேசவே பயப்படுகிறார்கள். அதிலும், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் குரல் என்று வெளியான ஆடியோவுக்குப் பிறகு, போனில் வெறும் குசலம் விசாரிப்புகள் மற்றும் “கிளம்பிட்டேன்... வந்துட்டேன்” போன்ற சம்பிரதாய பரிமாற்றங்கள் மட்டும்தான் நடக்கின்றன.
செந்தில் பாலாஜி வெறும் அமைச்சர் மாத்திரமல்ல... முதல்வருக்கும் அவரது குடும்பத்து அங்கத்தினர்களுக்கும் மிக மிக விசுவாசமாக இருப்பவர். எத்தனையோ அமைச்சர்கள் இருக்கையில் செந்தில் பாலாஜியை குறிவைத்திருப்பதன் பின்னணியில் முதல்வருக்கும் அவரின் குடும்ப உறவுகளுக்கும் ஒரு எச்சரிக்கையை அளித்திருப்பதாகவே நினைக்கிறது பாஜக.
கொங்கு மண்டலத்தில் திமுகவை தூக்கி நிறுத்தும் வேலைக்காக திமுக தலைமையால் பணிக்கப்பட்டவர் செந்தில் பாலாஜி. அதை ஓரளவுக்கு செம்மையாகவும் செய்து வருபவர். இவரை முடக்கிப் போடுவதன் மூலம் கொங்கு மண்டலத்தில் தங்களின் தேர்தல் வெற்றி வியூகங்களை எளிதாக்கிக்கொள்ள முடியும் என்பதும் பாஜகவின் கணக்கு.
அதற்காக பக்கா பிளானுடன் களத்துக்கு வந்திருக்கிறது பாஜக. கடந்த ஒரு சில மாதங்களில், டாஸ்மாக் மதுக் கடைகளின் வியாபார நடவடிக்கைகளை, டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் வழியாகவே திரட்டி வைத்திருக்கும் மத்திய அதிகாரிகள், அரசுக்கு வரியாக வராமல் விற்பனை ஆன மது பாட்டில்களின் மதிப்பையும் ஆதாரத்துடன் எடுத்து வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அசுர கதியில் நடக்கும் கல்குவாரி சுரண்டல்களும், அங்கே ஓயாமல் கேட்கும் வெடிச் சத்தமும்கூட பாஜக-வால் குறிவைக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கனிம வளங்களைச் சுமந்தபடி வரிசைகட்டி கேரளத்துக்குப் பறக்கும் லாரிகளுக்குப் பின்னே, செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் செயல்பாடுகளும் அடுத்தடுத்து ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடக்கத்திலிருந்தே செந்தில் பாலாஜிக்கு எதிராக பகீர் தகவல்களை வெளியிட்டு வந்த அண்ணாமலைே அடுத்ததாக இப்போது, “அடுத்த இலக்கு அமைச்சர் சிவசங்கர் தான்” என்று கொளுத்திப் போட்டிருக்கிறார். செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்டிருக்கும் அதே குற்றச்சாட்டு சிவசங்கர் மீதும் சாட்டப்பட்டுள்ளது. ’’ஆட்சி அதிகாரத்துக்குச் செல்லமான செந்தில் பாலாஜியை கைதுசெய்துவிட்டு, அடுத்ததாக சிவசங்கரை நோக்கியும் ஆக்ஷன் நகரக் கூடும். சிவசங்கருக்கு செக் வைப்பதன் மூலம், ஆட்சி அதிகார உச்சத்தில் உள்ள ஒரு இளைஞரையும் எச்சரிக்க நினைக்கிறார்கள்” என்பது தமிழக பாஜக-வில் சிலர் சொல்லும் சேதி.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கதறவிட்டுக் கொண்டிருக்கும் அதேசமயம், கைது நடவடிக்கையால் கட்சிக்குள் செந்தில் பாலாஜியின் டாம்பீகம் சற்றாவது குறையும் என்ற எண்ணத்தில், அவர் மீது பொறாமை கொண்ட சில திமுக பிரபலங்கள் சத்தமில்லாமல் பெருமூச்சுவிடுகிறார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்... அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது நடந்ததாகச் சொல்லப்படும் முறைகேட்டுக்காகத்தான் இப்போது அமலாக்கத்துறையில் சிக்கி இருக்கிறார் செந்தில் பாலாஜி. அதுபோலவே, அதிமுக ஆட்சியின்போது நடந்த வேறு சிலரின் அத்துமீறல்களும் கிளறப்படலாம் என்ற எச்சரிக்கையும் இதன்மூலம் மறைமுகமாக விடப்பட்டிருக்கிறது.
அதாவது, அண்ணாமலைக்கு எதிராகப் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு, பாஜக-வை சீண்டிப் பார்த்தால், அதிமுக-வினரின் பழைய வழக்குகளும் தூசு தட்டப்படலாம் என்ற எச்சரிக்கை இதன் பின்னே உள்ளது. இதற்குப் பயந்து, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கேட்கும் தொகுதிகளைக் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு அதிமுக உள்ளாகலாம்!
சீர்த்திருத்தம் என்ற பெயரில் அரசு நிர்வாகத்தில் திமுக எடுத்துவரும் சில நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான அதிருப்தி அலைகளைப் படரவிட்டிருப்பதை மறுக்க முடியாது. இருப்பினும் எஞ்சி இருக்கும் 3 ஆண்டு காலத்துக்குள் அதையெல்லாம் சரிசெய்து மீண்டும் ஆட்சிக் கட்டிலை தக்கவைக்கலாம் என்ற கணக்கில் இருக்கிறது திமுக. ஆனால், அந்தக் கனவை தகர்க்க மெள்ள மெள்ள காய் நகர்த்துகிறது பாஜக. தமிழக ஆளுநரின் அடுத்த கட்ட செயல்பாடுகளும் அதை நோக்கியே இருக்கும் என்கிறார்கள்.
’’மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என முதன் முதலாக விளித்து சர்ச்சையைக் கிளப்பியவர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அலைபேசி உரையாடல் ஆடியோ ஒன்றை வெளியிட்டு, அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த அவரை மதுரைக்குள் முடக்கிவிட்டது பாஜக. இதுபோல் ஆளுக்குத் தகுந்தபடி ஆதாரங்களை கையில் வைத்திருக்கும் டெல்லி, சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி அவற்றை வெளியில் விடும்” என்கிறார் தமிழக பாஜக-வின் சீனியர் ஒருவர்.
திமுக தரப்பிலோ, “நாங்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துபார்க்கட்டும். அதை மையப்படுத்தியே கலைஞர் பாணியில் நாங்களும் எதிர்ப்பு அரசியல் அஸ்திரம் கொண்டு கட்சியை வலுப்படுத்துவோம். இந்திய அளவில் எதிர்கட்சிகளை ஒன்றிணைப்போம். போர்க் குணத்தில் யாருக்கும் இணையானவர்கள் என்பதை நிரூபிக்கும் மற்றும் ஒரு களமாக இதை மாற்றுவோம்” என்கிறார்கள்.
பெட்டிச் செய்தி:
தொடருமா காங்கிரஸ் கூட்டணி?
கருணாநிதி இருந்தவரை மத்திய ஆட்சியாளர்களிடம் இந்த அளவுக்கு விடாப்பிடியாக மோதமாட்டார். மாநிலத்தின் நலன் கருதியும் திமுகவின் நலன் கருதியும் சூழலுக்கு ஏற்ப தனது நிலைப்பாட்டை நாசூக்காக மாற்றிக் கொண்டு அதற்கொரு நியாயமும் சொல்வார்.
அப்படித்தான், ஏவிவிட்ட எமெர்ஜென்சி அடக்குமுறைகளை எல்லாம் மறந்து, “நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக” என்று இந்திரா காந்தியை வரவேற்றார். 1998 மக்களவைத் தேர்தலில் “பண்டாரம் பரதேசிகள்” என்று பாஜகவை பழித்த கருணாநிதி, அடுத்த ஆண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து, மத்திய அரசில் தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டார்.
அந்த ஆட்சி முடியும் தருவாயில், “மதவாத அரசியல் செய்கிறது பாஜக” என்று சொல்லிவிட்டு பாஜக கூட்டணியை உதறிவிட்டு கொஞ்சமும் யோசிக்காமல் அடுத்த தேர்தலில் காங்கிரஸின் ‘கை’ பிடித்தார்.
இப்போது நடக்கும் சமாச்சாரங்களை எல்லாம் கருணாநிதியின் மதிநுட்பத்துடன் ஒப்பிடும் திமுக அனுதாபிகள் சிலர், “தமிழகத்தில் காலூன்றுவதற்காகவே பாஜக இத்தனை மெனக்கிடுகிறது. தனிப்பட்ட முறையில் திமுக மீது அவர்களுக்கு அவ்வளவு ஆத்திரம் இல்லை. காங்கிரஸை இத்தனை வெறித்தனமாகச் தூக்கிச் சுமக்கிறார்கள் என்பதுதான் திமுக மீது டெல்லி பாஜகவுக்கு உள்ள முக்கிய எரிச்சல்.
காங்கிரஸைத் தனிமைப்படுத்தி, பலவீனப்படுத்தி... வரும் மக்களவைத் தேர்தலில் மொத்தமாக கரைப்பது பாஜக-வின் முக்கிய லட்சியம். அதற்கு இடையூறாக இல்லாமல், காங்கிரஸைவிட்டு திமுக ஒதுங்கிக் கொண்டாலே பல பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம். அதைச் செய்வதற்கு, மேகேதாட்டு விவகாரம் உள்பட சில வலுவான காரணங்கள் இப்போதே இருக்கின்றன. காங்கிரஸை விரும்பாத எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைப்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். அப்படிச் செய்தாலே பாஜக-வின் கோபப் பார்வையிலிருந்து நகர்ந்துவிடலாம்” என்று திமுக-வின் மூத்த தலைவர்கள் பேசிக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.