குன்னூரில் வனத்துறைக்கு போக்கு காட்டும் கரடி!


குன்னூர்: ஊருக்குள் புகுந்த கரடி வனத்துறைக்கு போக்கு காட்டி வருவதால், கண் துடைப்புக்காக பெயரளவுக்கு டம்மி கூண்டு வைக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கரிமொராஹட்டி. இந்தப் பகுதியில் தேயிலை தோட்டங்களும், விவசாய நிலங்களும் அதிகமாக உள்ளன. இந்நிலையில் சமீப காலமாக இந்தப் பகுதிகளில் கட்டுமான பணிகள் அதிகரித்துள்ளன. மேலும் அப்பகுதிகளில் உள்ள மரங்களும் அதிக அளவில் வெட்டப்படுவதால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் கிராமத்தில் முகாமிட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்ததன் பேரில் வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.

ஆனால், கரடி சர்வ சாதாரணமாக கூண்டிற்குள் வந்து உணவுப் பொருட்களை உட்கொண்டு சென்று விடுகிறது. கண் துடைப்புக்காக பெயரளவுக்கு கரடிக்கு டம்மி கூண்டு வைக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தேயிலை தோட்டத்தில் பணியாற்ற தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளும் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே இதற்காக உரிய நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

x