அவிநாசி - அத்திக்கடவு 2-வது திட்டத்தில் விடுபட்ட குளங்களையும் சேர்க்க கொமதேக வலியுறுத்தல்


கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன்

கோவை: “அவினாசி - அத்திகடவு திட்டம் 2-ல் விடுபட்ட குளங்களை சேர்க்க வேண்டும்” என கொமதேக தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கோவையில் இன்று (ஆக.22) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அவினாசி - அத்திகடவு திட்டம் 60 ஆண்டு கால போராட்டமாகும். கடந்த 2009-ல் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன் பின்பு ஆட்சிக்கு வந்தவர்கள் அதை அப்படியே விட்டு விட்டனர். ஆய்வு பணிகளை தொடரவில்லை.

கொமதேக இதை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது. விவசாய அமைப்புகளும் போராட்டம் நடத்தின. இந்த அழுத்தம் காரணமாக 2016- ல் அதிமுக அரசு ஆய்வு செய்ய ரூ.3 கோடி ஒதுக்கியது. அதன் பின்னர், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினை அழைத்து வந்து போராட்டம் நடத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவினாசி - அத்திகடவு திட்டத்தின் 67 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவு பெற்றிருந்தது.

2021-ல் இப்போதைய அரசு அமைந்தவுடன், இத்திட்டத்திற்கு குழாய் அமைத்துள்ள பாதைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை திமுக அரசு சிறப்பாக செய்தது. அவினாசி - அத்திகடவு திட்டம் 2-ல் விடுபட்ட குளங்களை சேர்க்க வேண்டும். தண்ணீர் போகாத குளங்களுக்கும் தண்ணீர் செல்ல வேண்டும். இத்திட்டம் துவங்கப்படும் என தெரிந்த பின்பு பாஜக சார்பில் போராட்டம் அறிவித்தனர். இத்திட்டத்துக்கு 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆய்வு செய்ய உத்தரவிட்ட பின்னர், மத்திய அரசிடம் நிதியுதவி கேட்கப்பட்டது.

2016-18 வரை நிதியை பெற முயற்சித்தது. ஆனால் ஒரு பைசா கூட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. கோவையில் மெட்ரோ ரயில் தொடங்க அனுமதியை பாஜக தலைவர்கள் பெற்று கொடுக்க வேண்டும். பாஜக மாநில தலைவராக அண்ணாமலை கொங்கு மண்டலத்திற்கு, தமிழகத்திற்கு என்ன செய்து இருக்கின்றீர்கள். த.வெ.க தலைவர் நடிகர் விஜய் கட்சி கொடி அறிமுகப்படுத்தி இருப்பது மகிழ்ச்சி. கட்சிக்கு கொடி என்பது முக்கியமானது, கொடி அறிமுக விழா இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்” என்றார்.

x