முடங்கிய தெய்வீகப் பேரவையை மீண்டும் தொடங்க வேண்டும்: மதுரை ஆதினம் வேண்டுகோள்


குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதின மடத்தில் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதினம், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்டோர்.

காரைக்குடி: முடங்கிய தெய்வீகப் பேரவையை பொன்னம்பல அடிகளார் தலைமையில் மீண்டும் தொடங்க வேண்டும் என மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதின மடத்தில் குரு முதல்வர் தெய்வ சிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 699ம் ஆண்டு மகா குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய அன்னதானக் கட்டிடம் திறப்பு விழா, பொன்னம்பல அடிகளார் எழுதிய மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார். நூலை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் வெளியிட்டார். அன்னதான கட்டிடத்தை எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பாரிவேந்தர் திறந்து வைத்தார். மேலும் பாரிவேந்தருக்கு திருப்பணிச் செம்மல் பட்டம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து விழாவில் மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் பேசியதாவது: "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 45-வது குருமா சன்னிதானம் குன்றக்குடி அடிகளார் கொண்டு வந்தார். அதை தற்போது தமிழக அரசு செயல்படுத்தியது. ஆதினங்கள் சேர்ந்து தெய்வீகப் பேரவையை தொடங்கினர். தற்போது செயல்படாமல் முடங்கி உள்ளது.

தமிழக அரசுடன் பொன்னம்பல அடிகளார் நெருக்கமாக உள்ளார். நாங்கள் இறுக்கமாக உள்ளோம். முடங்கிய தெய்வீகப் பேரவையை பொன்னம்பல அடிகளார் தலைமையில் மீண்டும் தொடங்கி ஆதீன சொத்துகளை பாதுகாக்க வேண்டும். நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்போம்" என்று பரமாசாரிய சுவாமிகள் கூறினார்.

x