நெருக்கடி கொடுக்கும் வனத்துறை: தேனியில் மலைகிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


வனத்துறையினர் நெருக்கடியைக் கண்டித்து தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி: வனத்துறையின் நெருக்கடியைக் கண்டித்து மலை கிராம மக்கள் இன்று தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் போடி வட்டத்தில் அகமலை, அண்ணாநகர், ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, சொக்கன்அலை, படப்பம்பாறை உள்ளிட்ட ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு காபி, வாழை, எலுமிச்சை, மிளகு உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இங்குள்ள விவசாயிகள் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி வனத்துறை நோட்டீஸ் வழங்கி வருகிறது. இதனைக் கண்டித்து இக்கிராம மக்கள் இன்று (ஆக.22) தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பி.பாண்டியன் தலைமை வகித்தார்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "5 தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம். எங்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. ஆகவே வனத்துறை எங்கள் மீது நெருக்கடி செய்வதை நிறுத்த வேண்டும். விவசாயம் தடையின்றி தொடர உரிய வழிவகை செய்ய வேண்டும்" என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இது குறித்து மனுக் கொடுத்தனர்.

x