தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்தாலும் பயனில்லை: ஜி.கே.வாசன் கருத்து


ஜி.கே.வாசன் | கோப்புப் படம்

திருநெல்வேலி: தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றம் செய்தாலும், அதனால் பயனில்லை. எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன்: "தமிழகத்தில் பாலியல் பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மனதில் ரணத்தை ஏற்படுத்துகிறது. தனிமனித ஒழுக்கம் முக்கியம். அது தொடர்பான பாடங்கள் பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள், திருமண வீடுகளில் நடத்தப்பட வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர் கண்டறியப்பட்டால் விசாரணை இல்லாமல் உடனடி தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் பாலியல் சீண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூடி, மது இல்லாத தமிழகத்தை கொண்டு வருவது தான் ஒரே வழி. ஜனநாயகத்தில் எந்த துறையை சேர்ந்தவர்களும் அரசியலுக்கு வந்து பொதுப் பணியாற்றலாம்.

தவெக-விற்கு த.மா.கா சார்பில் வாழ்த்துக்கள். மக்களுக்கு யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள். யார் தங்களுக்கு உறுதுணையாக இருப்பார்களோ அவர்களுக்குத் தான் வாக்களிப்பார்கள். இப்போது தான் தவெக கட்சி தொடங்கப்பட்டுள்ளது. போக போகத் தான் கட்சியின் நிலை தெரியும். பாடல்கள் வெளியிடுவது இயக்கங்களுக்கான வழக்கமும் பழக்கமும் தான்.

மக்களுக்கு கட்சியின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு பொதுவாழ்வில் செயல்படுவது எந்த கட்சியாக இருந்தாலும் இருக்க வேண்டும். புதிய கட்சி தொடங்குவதே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான். மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் வாக்குகள் கிடைக்கும். மேலும் இயக்க நடவடிக்கைகளை பொறுத்தே கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்" என்று கூறினார்.

x