சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம் @ கோவில்பட்டி


கிராம மக்கள் போராட்டம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கூசாலிபட்டி கிராமத்தில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு கண்மாய் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதிலிருந்து குழாய் மூலமாகக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி சார்பில் குடிநீர் திறந்து விடும் பணியை செய்து வந்த தங்கவேல் என்பவரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதால், ஊராட்சியில் மாற்றுப் பணியாளர்கள் இல்லாமல் குடிநீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் கூசாலிபட்டி கிராமத்துக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்தும், சீராகக் குடிநீர் வழங்க வலியுறுத்தியும் இன்று காலை கிராம மக்கள் கோவில்பட்டி - கடலையூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் சீராகக் குடிநீர் வழங்க வலியுறுத்திக் கோஷமிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முறையாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

x