நீலகிரி: பந்தலூர் பகுதிகளில் சுற்றித்திரிந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டி கால்நடைகளை உரிமையாளர்கள் அழைத்துச் சென்ற நிலையில், மீதமுள்ள கால்நடைகள் நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டு வந்தது. குறிப்பாக பேருந்து நிலையத்தில் கூட்டமாக முகாமிடும் கால்நடைகள் பொதுமக்களுக்கு இடையூறு செய்துவந்தன. இதனால் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்ததனர்.
இதையடுத்து சாலைகள், பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த கால்நடைகளை நகராட்சி அதிகாரிகள் உத்தரவுப்படி ஊழியர்கள் பிடித்தனர். பிடிபட்ட கால்நடைகள் நெல்லியாலம் நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைக்கப்பட்டன. அபராதத் தொகையை கட்டி கால்நடைகளை அழைத்துச் செல்ல, அதிகாரிகள் கால்நடை உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த கால்நடைகளை உரிமையாளர்கள் அபராதத் தொகையை கட்டி அழைத்துச் சென்றனர். மீதமுள்ள கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் இதுவரை வந்து அழைத்துச் செல்லாததால், அவை நகராட்சி அலுவலகம் முன்பு கட்டி வைக்கபட்டுள்ளன. கால்நடைகளுக்கான அபராதத் தொகையாக ரூ.5,000 வசூலிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.