தமிழக அமைச்சரவையில் மாற்றமா? - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்!


சென்னை: தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியது. இந்த சலசலப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினே பதிலளித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கட்டுப்பாட்டு அறையை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் தகவல் வந்துள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 'அப்படியான தகவல் எனக்கே வரவில்லை' என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமாக இன்று அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27 முதல் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். முதல்வரின் அமெரிக்கா பயணத்தை முன்னிட்டு தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்பது நீண்டகாலமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் இரண்டு அல்லது 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்படுகிறது என்றும், மூன்று புதியவர்கள் அமைச்சராக வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியானது. மேலும், சில அமைச்சர்களின் இலாகா மாற்றமும் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

x