நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: கும்பகோணம் பொற்றாமரை குளக்கரையில் நேரில் ஆய்வு!


கும்பகோணம்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கும்பகோணம் பொற்றாமரை குளக்கரையின் வரைபடங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், கும்பகோணத்தில் 44 குளங்கள், 11 கால் வாய்கள் இருந்தன. இதில், பல குளங்கள் மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தயவு தாட்சண்யமின்றி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என 2018-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் முறையாக அமல்படுத்தவில்லை என உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில், கோயிலுக்கு சொந்தமான நிலங்களை முழுமையாக சர்வே செய்து, குளங்கள் மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்துக்குள் அகற்றி, அது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை ஆக்கிரமிப்புகள் மீண்டும் நீக்கப்படாவிட்டால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அக்.28 அன்று நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், பொற்றாமரை குளக்கரை மற்றும் அங்குள்ள வணிக நிறுவனங்களின் வரைபடங்களைப் பார்வையிட்டு, கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளதா, அதற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதா, எப்போது பட்டா வழங்கப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக நில அளவையரிடம் கேட்டறிந்து, அந்த குளத்தின் நான்கு கரைகளில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, இந்தக் குளத்தின் மேல்கரையில் படித்துறை இருந்ததாகவும், தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என அலுவலர் தெரிவித்ததையடுத்து, உடனடியாக இங்குள்ள வயது முதிர்ந்தவர்களை கண்டறிந்து அவர்களை நேரில் சந்தித்து, படித்துறை இருந்ததா என விசாரித்து கூறவேண்டும் என உத்தரவிட்டார்.

அவருடன், கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா, அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா, அறநிலையத்துறை செயல்பொறியாளர் இ.வீரமணி, வட்டாட்சியர் ச.சண்முகம் மற்றும் வருவாய்த்துறை, அறநிலையத்துறையினர் உடனிருந்தனர்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் பா.,பிரியங்கா பங்கஜம் கூறியது: "கும்பகோணம் மாநகருக்குள் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்தப் பகுதிகள் முழுவதும் அளவீடு செய்து, அதில், அரசுக்கு சொந்தமான இடம், பட்டா உள்ள இடம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் உள்ளதா என முதற்கட்ட ஆய்வுப் பணியைத் தொடங்கி உள்ளோம்.

நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகள் செய்யக் கூடாது. இது போல் நீர் நிலைகளை ஆக்கிரமித்திருந்தாலோ அல்லது சாலைகள் அமைத்திருந்தால், ஆய்வு மேற்கொண்டு விரைவில் அகற்றப்படும். உயர்நீதிமன்றம் உத்தரவின் படி வரும் அக்.28-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதே போல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான அனைத்து முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது" எனத் தெரிவித்தார்.

x