அதிமுக அணையப் போகும் விளக்கு, அதனால்தான் பிரகாசமாக எரிகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்ததை எதிர்த்து அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே வாய்த் தகராறு மிகக் கடுமையாக இருந்து வந்தது. ஆனால் மீண்டும் தங்கள் கூட்டணிக்கு அதிமுகவை கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிய பாஜக மேலிடம், அதிமுக குறித்த விமர்சனத்தை தவிர்க்குமாறு தங்கள் கட்சியினரை வலியுறுத்தியது.
அதையடுத்து அதிமுகவை விமர்சிப்பதை பாஜக நிர்வாகிகள் தவிர்த்து வந்தனர். அதேபோல அதிமுகவினரும் பாஜக குறித்து எந்த விமர்சனத்தையும் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மூலமாக பாஜக முயற்சித்து வருகிறது. ஆனாலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் இரண்டு கட்சிகளும் மீண்டும் ஒருவரை ஒருவர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்." பாஜக தேவை இல்லாத பெட்டி, அதை கழட்டி விட்டு விட்டோம், இப்போதும் இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதற்கு அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.
அவர் நேற்று ராணிப்பேட்டையில் நடைபயணம் மேற்கொண்டார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், 'பாஜகவை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. முதலில் நோட்டாவை ஜெயிக்கட்டும்' என்று கூறியுள்ளார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்று சொல்வார்கள். அதிமுக நிலையும் அதுதான். இரண்டும் ஒன்றுதான்" என்றார்.