மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையை தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக மற்றும் அதிமுக சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன. திமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.
அதிமுக தங்கள் கூட்டணிக்குள் தேமுதிக மற்றும் பாமகவை கொண்டு வரும் முயற்சிகளை விரைவுபடுத்தி உள்ளது. அதேபோல இந்த இரண்டு கட்சிகளையும் தங்கள் பக்கம் இணைக்க பாஜகவும் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் தேமுதிக எந்த பக்கம் செல்வது என்று முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறது. அதையடுத்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகிக்க உள்ளார். மூத்த நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்பட அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மக்களவைத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இடம் பெறுமாறு தேமுதிகவை அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே அழைத்து வருகின்றன. ஆனால், தேமுதிக அதிக இடங்களை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் தேமுதிக இருந்து வருகிறது.
இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்களிடம் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக பிரேமலதா கருத்து கேட்க உள்ளார். கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் பிரேமலதாவுக்கு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.