உணவு பாதுகாப்பு துறை சார்பில் விஐடியில் ‘உணவே மருந்து’ விழிப்புணர்வு


மேலக்கோட்டையூர்: வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூர் சென்னை வி.ஐ.டி., வளாகத்தில், உணவு பாதுகாப்புத் துறை சார்பில், உணவே மருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் பங்கேற்று பேசினர்.

விழாவில், ஊட்டச்சத்து உணவுதொடர்பான கண்காட்சி திறக்கப்பட்டது. விழிப்புணர்வு குறும்படம், உணவே மருந்து சின்னம் மற்றும் துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. அதேபோல், உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் திட்டம்மூலம் பசியோடு இருப்பவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனத்தை அமைச்சர் சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனத்துக்கான போக்குவரத்து பராமரிப்பு செலவாக வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் ரூ.5.40 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்களிடம் வழங்கினார்.

அமைச்சர் சுப்பிரமணியன் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் மருத்துவத் துறையை பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்ச்சியாக தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உணவே மருந்து என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு அந்த திட்டத்தை வி.ஐ.டி. பல்கலை வளாகத்தில் தொடங்கி வைக்க இந்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இக்கல்லூரியில் கரோனா காலத்தில் 2,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைத்து பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. உணவு, உடற்பயிற்சிஇரண்டையும் மிகச்சிறப்பாக கையாள்பவர்கள் அவர்கள் வாழ்நாளில் நோய்நொடியில்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

2021 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தமிழ்நாடு முழுவதிலும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உணவு மாதிரிகள் 64,077.அதில் பாதுகாப்பற்ற உணவு மாதிரிகளாக கண்டறியப்பட்டவை 4,160, தரமற்றஉணவு மாதிரிகளாக கண்டறியப்பட்டவை 10,453. எனவே தரமற்ற, பாதுகாப்பற்ற உணவு மாதிரிகள் மீது போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 10,278. இந்த வழக்குகளின் அபராதம் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை மட்டும் ரூ.9.24கோடி. குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் 3,042 அதற்காக பெறப்பட்ட அபராதம் ரூ.4.82 கோடி ஆகும்’’ என்றார்.

அமைச்சர் அன்பரசன் பேசும்போது, “அனைவருடைய உணவு பழக்கம் மாறிவிட்டது. இதனால் சிறிய குழந்தைகளுக்குகூட சர்க்கரை நோய் வருகிறது. சிறிய வயதினருக்கு இதயபாதிப்பு ஏற்படுகிறது. உணவு கட்டுப்பாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படு கிறது’’ என்றார். நிகழ்ச்சியில், செங்கை ஆட்சியர்ச.அருண்ராஜ் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x