முகவர்களுக்கான உணவை பறிக்கும் போலீசார்: செங்கல்பட்டு ஆட்சியரிடம் திமுக பிரதிநிதி புகார்


செங்கல்பட்டு ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், முகவர்களுக்கான ஆலோசனை நடைபெற்ற கூட்டம்.

செங்கல்பட்டு: வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள முகவர்களுக்கு கொண்டு செல்லும் உணவை அங்குள்ள போலீஸார் பறித்துக் கொள்கின்றனர் என செங்கல்பட்டு ஆட்சியரிடம் திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள், வரும் ஜூன் 4ம் தேதி அன்று குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில் எண்ணப்படுகிறது. இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

அப்போது, திமுக சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற சம்பத், “வாக்குப் பதிவு மையத்தில் உள்ள முகவர்களுக்கு உணவு கொண்டு சென்றால் நுழைவு வாயிலில் இருக்கும் காவல்துறையினர் உணவு பொட்டலங்களை பறித்துக் கொள்கிறார்கள். அதை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்” என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட ஓய்வு பெற்ற காவல்துறையை சேர்ந்தவரும், ஜெபமணி ஜனதா கட்சி வேட்பாளருமான ஜெ.மோகன்ராஜ், சம்பத்திடம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

“நீங்கள் எப்போதும் போலீஸாரைக் குறை கூறுகிறீர்கள்... நீங்கள் யோக்கியமா?” என மோகன்ராஜ் கேட்க, “கடந்த கால அனுபவத்தை தான் சொல்கிறேன்; நீங்கள் என்னிடம் பேசாதீர்கள் எதுவாக இருந்தாலும் ஆட்சியரிடம் கேளுங்கள்” என சம்பத்தும் பதிலளித்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆட்சியர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.

x