தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு இன்று செல்கிறார். அங்கு கூட்டணி தொடர்பாக உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 18 பேரும், திமுக முன்னாள் எம்.பி. ஒருவர் டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக தனது கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
அத்துடன் தேர்தல் அறிக்கைக்குழு மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் என்ன என்று கேட்டு வருகிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை குழுவும் மக்களைச் சந்திக்கும் பணியில் இறங்கியுள்ளது. கூட்டணி தொடர்பாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக கழட்டி விடப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள கட்சிகளை இணைத்து மூன்றாவது அணியை அமைத்து தேர்தலில் போட்டியிட அக்கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பாமக, தேமுதிக, ஐஜேகே, புதிய நீதிகட்சி மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோருடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் தேர்தலைச் சந்திக்க குழுக்களையும் பாஜக அமைத்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு வரச்சொல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர அழைப்பு விடுத்துள்ளார். இதன்பேரில், அண்ணாமலை இன்று காலை டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதற்கிடையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 18 பேரும், திமுக முன்னாள் எம்.பி. ஒருவரும் சந்தித்து, பாஜகவில் இணைய உள்ளனர். இதன் பின் அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புகிறார்.