வேகமெடுக்கும் கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கு முதல் பாரத் பந்த் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள் 


கிருஷ்ணகிரி சம்பவம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் விசாரணையை துரிதமாக மேற்கொள்ளவும், சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஐஏஸ், பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா, சத்ய ராஜ். காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தரவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்

முன்னதாக, கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்திகளின் அடிப்படையில் அப்பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம், இது தொடர்பாக காவல்துறையும், தமிழக அரசும் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவராமன், தன்னை வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்டு ரூ.36 லட்சம் பணம் பறித்ததாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

41,835 பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்: தமிழக தொழில் துறையின் தொழில் வழிகாட்டி நிறுவனம் சார்பில், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு முதலீட்டு மாநாடு, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, ரூ.68,773 கோடி மதிப்பிலான 19 திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், 27 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.51,157 கோடியாகும். இதன் மூலம் 41,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற முதல்வர் ஸ்டாலின், “தமிழக இளைஞர்களின் திறமைகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தொழில் துறையினரிடம் வலியுறுத்தினார்.

ஆவின் பால் பண்ணையில் பெண் ஊழியர் உயிரிழப்பு: திருவள்ளூர் அருகே காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி, உமாராணி எனும் 30 வயது தற்காலிக பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தவெக கட்சிக் கொடி அறிமுகம்: விஜய் அறிவிப்பு: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் ஏற்றி வைக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூரில் 2 புலிகள் விஷம் வைத்துக் கொலை: கூடலூரில் 2 புலிகள் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் சிக்ஸ் பகுதியில் இறந்த இரு புலிகள் விஷத்தால் உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வனத்துறையும், காவல் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சந்தீப் கோஷ் குறித்து பகீர் தகவல்கள்: ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் மருத்துவர் சந்தீப் கோஷ் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக அந்த மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளரான அக்தர் அலி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரிடம் ஏற்கெனவே சிபிஐ பல கட்ட விசாரணைகளை நடத்திவிட்டது.
இந்தநிலையில், இந்தக் குற்றச்சாட்டு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் சந்தீப் கோஷை மீதான விசாரணை வளையத்தை இன்னும் இறுகச் செய்யும் வகையில் உள்ளன.

ஐசிசி தலைவர் ரேஸில் ஜெய் ஷா முன்னிலை: பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா விரைவில் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசியின் தற்போதைய தலைவராக இருக்கும் கிரேக் பார்க்லேவின் பதவிக் காலம் வரும் நவம்பருடன் முடிகிறது. ஐசிசி விதிகளின்படி, தலைவர் தேர்தலுக்கு 16 வாக்குகள் தேவை. தற்போது இந்த 16 வாக்குகளும் ஜெய் ஷாவுக்கு உறுதியாகி இருப்பதாக தெரிகிறது.

பத்லாப்பூரில் இணைய சேவை முடக்கம், பள்ளிகள் மூடல்: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாப்பூரில் நான்கு வயதே நிரம்பிய 2 பள்ளிச் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் நடந்த மிகப் பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு புதன்கிழமை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“கமலா ஹாரிஸ் தலைமையில் புதிய அத்தியாயம்!” - சிகாகோ நகரத்தில் தொடங்கிய ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ். அமெரிக்கா அவரது தலைமையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் காண தயாராக இருக்கிறது” என்று கூறினார். இந்த மாநாட்டில் பேசிய தற்போதைய அதிபர் ஜோ பைடன், “ட்ரம்ப் எப்போதும் புதினுக்கு தலை வணங்குவார். நான் தலைவணங்கியது இல்லை. கமலா ஹாரிஸும் தலை வணங்க மாட்டார்” என்றார்.

பாரத் பந்த்: உ.பி., பிஹாரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை" என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை எதிர்த்து ‘தலித் மற்றும் ஆதிவாசி’ அமைப்புகள் புதன்கிழமை நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது. இதனால் பிஹார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கேரளாவில் ஆங்காங்கே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இடதுசாரிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

x