இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெண் கவுன்சிலருக்கு திமுக பிரமுகரால் இடையூறு? - பதாகையால் திருப்பூரில் பரபரப்பு


திருப்பூர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெண் கவுன்சிலருக்கு, திமுக பிரமுகர் இடையூறு ஏற்படுத்துவதால், திருப்பூரில் 45-வது வார்டில் பெண் கவுன்சிலரை காணவில்லை என்ற பதாகைகள் வார்டுக்குள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திருப்பூர் மாநகராட்சியின் 45வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பாத்திமா தஸ்ரின்(35). இவரது தந்தை முஸ்தபா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் பாத்திமா தஸ்ரின் பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலின் போது, வார்டில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். தொடர்ச்சியாக மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்கவில்லையென்றாலும், அவ்வப்போது பங்கேற்பதுண்டு. மேலும் அவர் பெங்களூருவில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வார்டில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை, அவரது தந்தை முஸ்தபா கவனித்து வந்தார். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட கோம்பைத்தோட்டம், ஜம்ஜம் நகர், பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் 45வது வார்டு கவுன்சிலரை காணவில்லை என பதாகை வைக்கப்பட்டது. அந்த பதாகையில், 45வது வார்டை சிங்கப்பூராக மாற்றுவேன் என கூறிய, கவுன்சிலர் சிங்கப்பெண்ணே எங்கே? மக்களின் பணியை மக்களே செய்வதற்கு எதற்கு கவுன்சிலர்? ஐ.டி.யில் வேலை செய்யும் உங்களுக்கு எதற்கு கவுன்சிலர் பதவி? என வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இது தொடர்பாக பாத்திமா தஸ்ரின் கூறியபோது, “வார்டு பொதுமக்கள் இந்த பதாகையை வைக்கவில்லை. திமுக பிரமுகர் தூண்டுதலின் பேரில் தான் வைத்துள்ளனர். திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்தாலும், திமுகவினர் இப்படி செய்வது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த வாரம் கூட செல்லாண்டித்துறை அரசு அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் பிரச்சினை ஏற்பட்டபோது, உரிய தகவலை அளிக்காமல் திசைமாற்றி பிரச்சினை செய்துள்ளனர்.

வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அடிப்படை வசதிக்கான பணிகளை அதிகாரிகள் சரியான முறையில் மேற்கொள்ள விடுவதில்லை. இதனால் தான் இந்த அவப்பெயர் ஏற்படுகிறது. கர்ப்பம் தரித்திருப்பதால் கடந்த 2 மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்கவில்லை. வரும் கூட்டத்தில் பங்கேற்கிறேன்" என்று பாத்திமா கூறினார்.

x