“அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை சொந்தம் கொண்டாட அதிமுகவுக்கே முழு உரிமை” - முன்னாள் அமைச்சர்கள்


சேவூரில் இனிப்பு வழங்கி கொண்டாடிய கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர், அவிநாசி அருகே முறியாண்டம்பாளையம் குளத்துக்கு வந்த தண்ணீரை அதிமுகவினர் மலர்தூவி வரவேற்றனர்.

அவிநாசி: “அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முழுமையாக சொந்தம் கொண்டாட அதிமுகவுக்கு மட்டுமே உரிமை உண்டு” என அவிநாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று (ஆக. 21) தெரிவித்தனர்.

அரசியல் ரீதியாக திமுகவும், அதிமுகவும் திட்டத்துக்கு சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கி பணிகளை துவங்கி வைத்தது ஜெயலலிதா என்றும், திட்டத்தை முழுமையாக நிறைவு செய்தது முன்னாள் முதல்வர் பழனிசாமி என்றும், திட்டத்தை இரண்டரை ஆண்டுகள் தாமதப்படுத்தியது திமுக தான் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், 65 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை கடந்த 17-ம் தேதி காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில் அதிமுக சார்பில் அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி சேவூரில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதையடுத்து முறியாண்டம் பாளையம் குளத்துக்கு வந்த தண்ணீரை அதிமுகவினர் இன்று (ஆக. 21) மலர் தூவி வரவேற்றனர்.

அப்போது முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களுமான செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "65 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும் இத்திட்டம் நிறைவேறும் என 2014-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். போராட்டக் குழுவினரின் தொடர் கோரிக்கையால் ஜெயலலிதா அரசு ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கி ஆய்வுப் பணி மேற்கொண்டது.

மாநில அரசின் நிதியை மட்டும் கொண்டு ரூ.1652 கோடி ஒதுக்கி, முன்னாள் முதல்வர் பழனிசாமி அரசு, 90 சதவீத பணிகளை நிறைவேற்றியது. தொடர்ந்து விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பதற்கு, 2-வது திட்ட வரைப்படம் தயாரித்து ஆய்வுப் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், கரோனா பாதிப்பு மற்றும் ஆட்சி மாற்றம் காரணாக 10 சதவீத பணிகளால் திட்டம் தாமதமானது. இந்த 10 சதவீத பணிகளைக் கூட 3 ஆண்டுகளாகியும் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி விட்டு, தற்போது திறந்திருப்பதாக திமுக அரசு தெரிவிக்கிறது.

முழுமையாக நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்றியது அதிமுக அரசு தான். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை முழுமையாக சொந்தம் கொண்டாட அதிமுகவுக்கு மட்டுமே உரிமை உண்டு. இது மக்களுக்கு தெரியும். மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆளும் திமுக அரசும் நிதி ஒதுக்கி அத்திக்கடவு- அவிநாசி 2ம் திட்டத்தை நிறைவேற்றி சொந்தம் கொண்டாடிக் கொள்ளலாம்" என்று அமைச்சர்கள் கூறினர்.

எம்எல்ஏ-க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார், மேட்டுப்பாளையம் ஏ.கே. செல்வராஜ், சூலூர் வி.பி.கந்தசாமி, வால்பாறை அமுல் கந்தசாமி, கிணத்துக்கடவு தாமோதரன், திருப்பூர் வடக்கு கே.என்.விஜயகுமார், பெருந்துறை ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

x