திருச்சி: குடிநீர் இணைப்புகளில் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சிய 15 மின் மோட்டார்கள் பறிமுதல்


திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியது கண்டறியப்பட்டு மாநகராட்சி பணியாளர்களால் பறிமுதல் செய்யப்பட்ட மின்மோட்டார்கள்.

திருச்சி: மாநகரப் பகுதிகளில் குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சிய 15 மின் மோட்டார்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து வீடு, வணிக குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாநகர பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் பலர் சட்டவிரோதமாக மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் உத்தரவின் பேரில் நேற்று திருச்சி மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண் 56க்கு உட்பட்ட ராம்ஜி நகர் பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று காலை வீடு வீடாகச் சென்று குடிநீர் விநியோகம் குறித்து திடீர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது அப்பகுதியில் உள்ள 15 வீடுகளில் சட்டவிரோதமாக குடிநீர் விநியோக குழாயில், மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியது கண்டறியப்பட்டது. இதையடுத்து சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 15 மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநகர பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதால் பொதுமக்கள் அனைவருக்கும் சீராக குடிநீர் கிடைக்காமல் போகிறது. தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும். குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும்" என்று செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

x