பாம்பன் புதிய ரயில் பாலம்: சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்


பாம்பன் புதிய ரயில் பாலத்தில்  சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் இன்று (ஆக.21) நடைபெற்றது.

பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டு நூறாண்டுகளை கழிந்து விட்ட நிலையில், பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் தூக்குப் பாலத்தில் விரிசல் விழுந்ததாலும், பழைய பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான முடிவினை மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது. முதற்கட்டமாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கன்னியாகுமரியில் 01.03.2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். ரயில்வே நிர்வாகம் 31.09.2021-க்குள் புதிய ரயில்வே பாலத்தின் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றம் மற்றும் கரோனா பரவலால் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் புதிய பாம்பன் பாலப்பணிகளை முடிக்க முடியவில்லை. மேலும், புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டது. புதிய ரயில் பாலம் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரமானது. இது பழைய ரயில் பாலத்தை விட சுமார் ஒன்றரை மீட்டர் உயரம் அதிகம். பாலத்தின் நீளம் 2,078 மீட்டர். கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது. இரட்டை வழித்தடத்துடன் மின்சார ரயில்களை இயக்கும் வகையில் பாலத்தின் தூண்கள் வடிவைமைக்கப்பட்டுள்ளன.

20 மாதங்களாக ரயில் சேவை நிறுத்தம்: முன்னதாக பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகளுக்காக 23.12.2023 அன்று முதல் ராமேசுவரத்துக்கு முற்றிலுமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ராமேசுவரத்துக்கு வரும் ரயில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்படுகிறது. இதனால் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக ராமேசுவரத்துக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய பாம்பன் ரயில் பாலத்தில் தண்டவாளங்கள், கர்டர்கள் மற்றும் செங்குத் தூக்குப் பாலத்தை பொறுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும், புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இரண்டு இன்ஜின்களைக் கொண்ட ரயிலில், ஜல்லி கற்கள் நிரப்பப்பட்ட 11 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. முதலில் 30 கி.மீ வேகத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 45 கி.மீ வேகம், 60 கி.மீ என வேகத்தை அதிகரித்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனைக்காக புதிய ரயில் பாலத்தின் தூண்கள், தண்டவாளங்களில் சென்சார் கருவிகள் பொறுத்தப்பட்டு பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஓட்டத்தின் போது, ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் மற்றும் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகள், ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர். புதிய பாம்பன் ரயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்தை உயர்த்தி இறக்கும் சோதனையை இம்மாத இறுதியில் நடத்த ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அனைத்து வகையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அக்டோபர் மாதம் மீண்டும் மண்டபத்திலிருந்து ராமேசுவரத்துக்கு ரயில் இயக்குவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல, ஜனவரி முதல் ராமேசுவரம் வரையிலும் மின்சார ரயில்களை இயக்குவதற்கானப் பணிகளும் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x