வழக்கறிஞர் கொலை: நெல்லையில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்


திருநெல்வேலி: இடப்பிரச்சனையில் வழக்கறிஞர் சரவணன் ராஜ் (42) அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்ற பணிகளை வழக்கறிஞர்கள் புறக்கணித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் ராஜ். திருநெல்வேலி அருகே ஆரோக்கிய நாதபுரத்தில் சென்னையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இடப் பிரச்சினை சம்பந்தமான வழக்குகளை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக அந்த இடத்திற்கு இரும்புவேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், சென்னையில் உள்ள இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் போலிப் பத்திரங்கள் மூலம் தங்களுடைய நிலத்தை அபகரித்து விட்டதாக ஆரோக்கியநாதபுரம் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இதற்கு முன் போராட்டங்களும் நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருடைய நிலத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் நிலத்தை சமன்படுத்தும் வேலை நேற்று முன்தினம் நடந்தது. அப்பொழுது அதே இடத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும், சரவணன்ராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் சரவணன் ராஜ் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் உயிரிழந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வழக்கறிஞர் சரவணன் ராஜ் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் அவரது மனைவிக்கு அரசு வேலை மற்றும் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி நீதிமன்ற பணிகளை வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரதான சாலையில் மாவட்ட நீதிமன்ற முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் கீதா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்கறிஞர்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனிடையே வழக்கறிஞர் சரவணன் ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக செல்வம் உட்பட 3 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாக தெரிகிறது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செல்வம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியனின் கார் ஓட்டுனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

x