மதுரை அரசு மருத்துவமனை பொறுப்பு டீனும் ஒய்வு பெறுகிறார்: புதிய டீன் நியமனம் எப்போது?


மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் 'பொறுப்பு டீன்', வருகிற 31ம் தேதியுடன் ஒய்வு பெறுகிறார். 'டீன்' பேனல் தற்போது வரை தயாராகாததால் புதிய 'டீன்' நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், மீண்டும் 'பொறுப்பு டீனோ' அல்லது தற்போது உள்ள 'பொறுப்பு டீனி'ன் பதவி காலத்தை நீட்டிக்கவோ வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை 'டீன்' ஆக இருந்த ரெத்தினவேலு, கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஒய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்றது மக்களவைத் தேர்தல் நேரத்தில் என்பதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறையால் உடனடியாக புதிய 'டீன்' நியமிக்க முடியவில்லை என்று காரணம் கூறப்பட்டது. தற்காலிகமாக பேராசிரியர் டாக்டர் தர்மராஜ், 'பொறுப்பு டீன்' ஆக நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்து நன்னடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்ட பிறகும், மதுரை அரசு மருத்துவமனைக்கு 'டீன்' நியமிக்கப்படவில்லை. 'பொறுப்பு டீனை' கொண்டே மருத்துவமனை நிர்வாகப்பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில் தற்போது இந்த 'பொறுப்பு டீன்' டாக்டர் தர்மராஜூம், வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவருக்கான பணி ஓய்வு பாராட்டு விழா ஏற்பாடுகளை மருத்துவமனை பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்து வருகிறார்கள். இவரும் ஓய்வு பெற்றப்பிறகு இவருக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த பேராசிரியர் ஒருவரே 'டீன்' ஆக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''புதிய 'டீன்' நியமிக்க மூத்த பேராசிரியர்கள் கொண்ட பட்டியல் தயார் செய்து 'டீன்' சீனியாரிட்டி பேனல் பட்டியல் தயார் செய்ய வேண்டும். ஆனால், தற்போது வரை 'டீன்' பேனல் பட்டியல் தயாராகவில்லை. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி வரை பேராசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த 'டீன்' பட்டியலில் இடம்பெற முடியும். ஆனால், 2019ம் ஆண்டு மார்ச் 15ம் தேதிக்குள் வழங்க வேண்டிய பேராசிரியர் பதவி உயர்வு ஆணையை சிலருக்கு தாமதமாக மருத்துவக்கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தல் ஒரு காரணமாக கூறப்பட்டது. தேர்தல் நடப்பதாக இருந்தால் அதற்கு முன்பே, பதவி உயர்வு ஆணையை மருத்துவக்கல்வி இயக்குநரகம் அனுப்பியிருக்க வேண்டும். அதனால், மக்களவைத்தேர்தல் முடிந்த வேளையில் பேராசிரியர் பதவி பெற்றவர்களும் தங்கள் பெயர்களையும் 'டீன்' பேனல் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதை, 2019 மார்ச் 15க்கு முன் பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்கள் எதிர்க்கிறார்கள். இரு தரப்பு பிரச்சினையால் 'டீன்' பேனல் தயாராவது தள்ளிப்போகிறது.

அதனாலே, 'பொறுப்பு டீன்' னை கொண்டு தற்காலிகமாக மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பொறுப்பு டீனும் பதவி உயர்வு பெறுவதால் மீண்டும் உடனடியாக புதிய 'டீன்' நியமிக்க முடியாத நிலையில் மருத்துவக்கல்வி இயக்குநரகம் உள்ளது. ஏனெனில் 'டீன்' பேனல் தயார் செய்ய வேண்டும். ஆனால், தற்போது வரை 'டீன்' பேனல் தயாராகாததால், தற்போதைய 'பொறுப்பு டீன்' இந்த மாதம் ஒய்வு பெற்றப்பிறகு மீண்டும் 'பொறுப்பு டீன்' நியமிக்கவே அதிக வாய்ப்புள்ளது. அப்படி இல்லாத பட்சத்தில் தற்போது உள்ள பொறுப்பு 'டீன்' தர்மராஜையையே மீண்டும் 'பொறுப்பு டீன்'னாக பதவியை நீட்டிக்க வாய்ப்புள்ளது,'' என்றனர்.

சென்னைக்கு பிறகு தமிழகத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாகவும், அதிக நோயாளிகள் வரக்கூடிய இடமாகவும் உள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நிரந்தர ‘டீன்’ நியமிக்க, தமிழக அரசு துரித முடிவெடுக்க வேண்டும் என பேராசிரியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

x