பேராசிரியரைக் கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் | கும்பகோணம்


கும்பகோணம்: அரசு கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியரைக் கண்டித்து, மாணவ, மாணவிகள் 4-வது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து, முதல்வர் அறையின் முன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அரசு கல்லூரியின் முதுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயவாணிஸ்ரீ. இவர், முதுநிலை தமிழ்த்துறையில் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்தியபோது, சாதிய ரீதியாகவும், பெண்களை தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் அண்மையில் கடிதம் வழங்கினர்.

ஆனால், பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாததால், மாணவ, மாணவிகள் கடந்த 15-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர் அரண் சார்பில் கல்லூரி அணித்தலைவர் சாமின்ராஜ் தலைமையில், செயலாளர் தனுஷ்குமார், ஊடகப்பிரிவு நிர்வாகி ஆகாஷ், ஒருங்கிணைப்பாளர் கார்த்தி மற்றும் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 4-வது நாளாக, கல்லூரி வாயிலில் அமர்ந்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் கண்டன முழக்கமிட்டனர்.

தொடர்ந்து கல்லூரி முதல்வர் அறை முன்பு அமர்ந்து, மாணவ, மாணவிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

x