புதிய அரசியல் கட்சி கண்டிருக்கும் விஜய் மீது, அவர் பாஜகவின் பி டீம் என்ற விமர்சனம் சுலபமாக சுமத்தப்படுகிறது. தம்பி விஜய்... என்று சீமான் அன்பொழுக பேசியதும் அண்ணன் விஜய் என்கிறார் உதயநிதி. விஜய் வருகையால் திமுகவின் வாக்குகள் சிதறப் போகிறது என்கிறார் செல்லூர் ராஜூ. வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நிலையில், தொலைபேசியில் விஜய்க்கு வாழ்த்து சொல்கிறார் கமல்ஹாசன். தமிழக அரசியலில் யார் வாக்குகளை பிரிக்க போகிறார் விஜய் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாய் நிற்கிறது.
வாக்குகளை விட, வரும் மக்களவைத் தேர்தலில், விஜய் ரசிகர்கள் யாருக்கு தேர்தல் வேலைப் பார்க்க போகிறார்கள் என்பதில் தான் குறியாய் நிற்கின்றன அரசியல் கட்சிகள். அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல், பாஜகவை மையமாகக் கொண்டே அடையாளம் காணப்படுகிறது. பாஜக ஆதரவு - எதிர்ப்பு என இருதுருவ அரசியலே இந்த தேர்தலின் பிரதானமாக இருக்கப் போகிறது. எனவே, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் முதல், வாக்களிக்கப்போகும் சாமானிய வாக்காளர் வரை, இந்த கேள்வியில் இருந்தே தங்கள் நிலைப்பாடுகளை தீர்மானிக்க வேண்டியிருக்கும். மக்களவைத் தேர்தல் சமீபத்தில் கட்சியை அறிவித்து விட்டு, சட்டப்பேரவை தேர்தலே எங்கள் இலக்கு என அறிவித்திருக்கும் நடிகர் விஜயை சுற்றிலும் இதே கேள்வியே வளைய வருகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சியமைக்க அனுமதிக்கக் கூடாது என்ற ஒற்றை நோக்கத்தில், முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த் இந்தியா கூட்டணியை தொடங்கின. ஆனால் பாஜகவின் வழக்கமான சித்து வேலைகள் காரணமாக, இந்தியா கூட்டணி இன்னும் உயிரோடு இருக்கிறதா என்ற கேள்வி அதில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு எழும் வகையில் அதன் நிலைமை பரிதாபமாக மாறி உள்ளது.
எதிர்ப்பை சிதைப்பது, ஆதரவை ஊக்குவிப்பது, தனக்கு கிட்டாத வாக்குகளை எதிர்தரப்புக்கு சேர விடாது சிதறிடிக்கச் செய்வது... உள்ளிட்டவையே தேர்தல் நெருக்கத்திலான பாஜகவின் அரசியல் அஸ்திரங்களாக தென்படுகின்றன. இந்த களேபரங்களின் மத்தியில் கட்சியை அறிவித்திருக்கும் விஜய் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகளையும், பாஜகவுடன் பொருத்தியே ஆம் - இல்லை என ஒப்பிட வேண்டியதாகிறது.
விஜய்க்கு பாஜக உடனான பரிச்சயம் என்பது மோதலாகவே ஆரம்பித்தது. விஜய் திரைப்படங்களில் முன்வைத்த பஞ்ச் வசனங்களால் சீற்றமடைந்த பாஜகவினர், விஜய்க்கு எதிராக கிளம்பினார்கள். அவர் ஜோசப் விஜயாக இருந்ததும், பாஜகவினருக்கு வசதியாகிப் போனது. சளைக்காத விஜயும் அதன் பின்னர் ஜோசப் விஜய் என்றே தன்னை வம்படியாய் அடையாளப்படுத்தி பதிலடி தந்தார்.
அந்த உரசலின் அடுத்தக்கட்டமாக, ’மாஸ்டர்’ படப்பிடிப்பு தருணத்தில் விஜய்க்கு எதிரான வருமான வரித்துறை அதிரடிகள் அடையாளம் காணப்பட்டன. மாஸ் ஹீரோவான விஜய் அப்போது நடத்தப்பட்ட விதம் அவரது சாமானிய ரசிகனை குமுறச் செய்தது. ஆனால் இயல்பில் சங்கோஜம் கொண்டவரும், சுலபத்தில் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தாத சுபாவமும் உடைய விஜயின் மனோவோட்டத்தை எவராலும் எளிதில் பல்ஸ் பார்க்க முடியவில்லை.
ஏற்கனவே ’தலைவா’ படத்துக்காக அதிமுக தலைமையுடன் மோத நேரிட்டபோதும், இதே போன்ற அவமானத்தை சந்தித்து விஜய் மீண்டிருக்கிறார். அதே போன்று திமுகவுடனும் அவருக்கான உரசல் பின்னாளில் எழுந்திருக்கிறது. ஆனால், பாஜகவின் நெருக்கடி அவருக்கு வேறாக இருந்தது. மத்திய விசாரணை அமைப்புகள் மட்டுமன்றி, டெல்லி சார்பாக நீண்ட அரசியல் தரகர்களும், விஜய் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை வேறு வகையில் நெருக்கியதாக தகவல்கள் வெளியாயின.
அங்கிருந்தே தற்போதைய கட்சிக்கான அறிவிப்பும், விஜய் பாஜகவின் பி டீமே என்ற ஐயமும் புறப்பட்டன. கட்சி அறிவிப்பில் தனது பெயரில் இருந்த ஜோசப்பை துறந்தது, ரசிகர் சந்திப்பில் நெற்றியில் திலகத்தோடு காட்சியளித்தது, கட்சியின் பெயரில் தமிழ்நாடுக்கு பதிலாக தமிழகம் இடம்பெற்றிருந்தது, அதற்கு முன்னதான விஜய் தரப்பினரின் தாக்குதல் திமுகவை நோக்கியிருந்தது உள்ளிட்டவை, விஜய் பாஜகவின் பி டீமா என்ற கேள்விக்கு ருசு சேர்க்கின்றன.
பாஜகவின் பி டீம் என்ற சாடல் படியாத அரசியல் கட்சிகள் அரிது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக - அதிமுக ஆகியவை, பரஸ்பரம் பாஜக பி டீம் என தங்களுக்குள் வாரிக்கொள்வதில் தொடங்கி, சீமான், கமல்ஹாசன் எனப் பலரும் பி டீம் பழிக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதனை உறுதி செய்வது போன்றே அவர்களின் நடவடிக்கைகளும் வாக்காளர்களுக்கு ஐயத்தை எழுப்பி இருக்கின்றன.
இந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கும் விஜய் தரப்பிலும் அதனை நிறுவுவதில் தோதாக பல தடயங்களும் கிடைக்கின்றன. பாஜக தான் வளரத் தலைப்படும் இடங்களில், தனக்கு கிடைக்காத வாக்குகள் தனது எதிர் முகாமுக்கு செல்லக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கும். அந்த வகையில், பாஜகவின் பிரதான எதிரியான திமுகவின் முக்கிய வாக்குவங்கியான சிறுபான்மையினர், தலித்துகள் என இந்துத்துவர்கள் அல்லாத வாக்குகளை விஜய் சிதறடிக்க உதவுவார் என்று கணிப்பது எளிது. மேலும், புதிய வாக்காளர்களை கவர்ச்சி அரசியலின் பெயரில் தனது பக்கம் திருப்புவதும் விஜய்க்கு எளிதில் ஜெயமாகும்.
திரைக்கலைஞர்கள் அதிலும் மாஸ் ஹீரோக்கள் மீதான வசீகர அலைக்கு என வாக்களிக்கும் மோகம் தமிழ்நாடு, ஆந்திராவில் வெகுவாய் அதிகம். தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆரம்பித்து வைத்த இந்த போக்கின் பின்னணியிலும், விஜய் அரசியலுக்கு வந்ததன் அரசியல் அழுத்தமும் முணுமுணுக்கப்படுகிறது. எம்ஜிஆருக்கு எதிராக அப்போதைய அவரது வருமானம் மற்றும் திரைப்படங்களின் தயாரிப்பு செலவினம் தொடர்பான விசாரணை அஸ்திரங்களே, அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தலைமைக்கு எம்ஜிஆரை திமுகவுக்கு எதிரான துருப்புச்சீட்டாக்கியது என்றொரு கோணம் பிரபலமானது. அதே சமன்பாடு விஜய் வகையிலும் பலிதமாகி இருப்பதாக பழம் அரசியல் நோக்கர்களை ஒப்பிடச் செய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் சினிமா மார்க்கமாக அரசியலில் வலதுகால் வைக்கும் நட்சத்திரங்கள் பெரும்பாலானோருக்கு எம்ஜிஆரே பெரும் ஆதர்சம். விஜயும் அதற்கு விதிவிலக்கல்ல. எம்ஜிஆர் தனக்கான டெல்லி அதிகாரங்களின் ஆதரவை பெற்றதோடு, தனது ரசிகர்களை தொண்டர் படையாக்கி ஜெயித்த வரலாற்றினை, மீண்டும் எழுத விஜய்க்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக சொல்லலாம். நடப்பு சூழலில் தன்னையும் தனக்கான குடைச்சல்களையும் எளிதாக எதிர்கொள்ளும் விஜய், பிற்பாடு அரசியல் களத்தில் வரவேற்பு திரண்டால் அதனை பயன்படுத்திக்கொண்டு எதார்த்தத்திலும் நாயக அரசியல் பிம்பமாக தன்னை வளர்த்துக்கொள்ள பிரயத்தனப்படுவார்.
விஜயை சூழ்ந்திருக்கும் அவரது ஆலோசகர்கள் மற்றும் நலம் விரும்பிகளும் பின்னணியும் அவ்வாறே, பாஜக போன்ற அதிகாரத்துக்கு வளைந்து கொடுப்பவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். எனவே தற்போதைக்கு விஜயை பாஜவின் பி டீம் என எளிதில் சொல்லிக் கடந்துவிடுவது சுலபம். ஆனால், மக்கள் ஆதரவைப் பொறுத்து விஜய் விஸ்வரூபம் எடுத்தால், பாஜகவையும் சளைக்காது அவர் பதம் பார்க்க வாய்ப்பாகும். சினிமா கதைகளை விட சுவாரசியமாக விரியும், அரசியல் களங்களின் அடுத்தடுத்த நகர்வுகளுக்காக நம்மைப் போலவே விஜயும் ஆவலுடன் காத்திருக்கக்கூடும். அதுவரை பி டீம் அடையாளங்களை விஜய் தரப்பினர் விரும்பாவிடினும் சுமந்தே ஆக வேண்டியிருக்கும்.