கரூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவே நேரடியாக போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர், தேர்தல் பணிக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதால் எம்பி ஜோதிமணிக்கு மீண்டும் சீட் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, மக்களையும் இப்போதே தேர்தல் ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தற்போது காங்கிரசின் ஜோதிமணி எம்பி-யாக உள்ளார். இந்த முறை கரூர் தொகுதியை காங்கிரஸுக்கு வழங்கக் கூடாது என்றும் இங்கு திமுகவே நேரடியாக போட்டியிட வேண்டும் என்றும் அக்கட்சியினர் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
எம்பி-ஜோதிமணி கடந்த 5 ஆண்டுகாலத்தில் தொகுதி பக்கம் தலைகாட்டவேயில்லை என்றும், மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் எதையும் நிறைவேற்றித் தரவில்லை எனவும் தொகுதி முழுவதுமே எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது.
தேர்தல் நெருங்கிய நிலையில் கடந்த 6 மாதங்களில்தான் ஜோதிமணி தொகுதிக்குள் வலம் வருகிறார். ஆனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கொதிப்படைந்து அவரை விரட்டியடிக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
மேலும், இந்த முறை தொகுதி பங்கீட்டில் திமுக தலைமை காங்கிரஸுக்கு எதிர்பார்த்த எண்ணிக்கையை ஒதுக்கீடு செய்யுமா என்பது சந்தேகமே. இதன் காரணமாக கரூரிலிருந்து காங்கிரஸ் எளிதாக கழற்றிவிடப்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
மேலும், கடந்த 2014, 2009, 2004 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் கரூர் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட்டிருந்தாலும், 2004 தேர்தலில் கே.சி.பழனிசாமி வெற்றி பெற்றதே திமுக கடைசியாக கரூரில் நேரடியாக பெற்ற வெற்றியாகும்.
எனவே, 20 ஆண்டுகால இடைவெளி ஏற்பட்டுள்ளதால் கரூரில் திமுக மீண்டும் நேரடியாக வெற்றி பெற வேண்டும் என்பதே திமுக தொண்டர்கள் தலைமைக்கு தெரிவிக்கும் தகவலாக உள்ளது.
திமுக கைவிட்டாலும், ராகுல் காந்தியிடம் நேரடியாக பேசும் செல்வாக்கு படைத்தவராக ஜோதிமணி உள்ளார். எனவே, அவர் முடிந்தவரை மீண்டும் கரூரில் போட்டியிட முயற்சிப்பார் என கரூர் காங்கிரஸார் கூறுகின்றனர்.
திமுக தொண்டர்கள் எதிர்பார்ப்பதை போலவே கரூரில் நேரடியாக திமுக போட்டியிடுமானால் அது இந்த முறை புதுமுகமாகதான் இருக்கும். குறிப்பாக சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா எம்பி தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்கிற தகவலும் உடன் பிறப்புகளிடையே உலா வருகிறது.
இதுகுறித்து கரூர் மாவட்ட திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “அரசியல் பழிவாங்கும் நோக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை மூலம் பாஜக அரசு கைது செய்துள்ளது என்பது எல்லோருக்குமே தெரியும். திமுக அரசில் சாதனைகளுக்கு பஞ்சமில்லை. தற்போதைய சூழலில் அமைச்சரின் மனைவி களமிறக்கப்பட்டால் அதுவே தேர்தல் வெற்றிக்கு வழிகோலும்" என்றார்.