பூந்தமல்லி: சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 116 கிமீ தொலைவுக்கு, மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் என, 3 வழித்தடங்களில் கட்டுமான பணி நடைபெறுகிறது.
இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தட கட்டுமான பணியில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் பில்லருக்கு மேல் பகுதியில் பாலம் அமைக்கப்பட்ட நிலையில் அதன் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இதில், நேற்று ராட்சத கிரேன் உதவியுடன் பாலத்தின் மேல் பகுதியில் கான்கிரீட் சிலாப்பை ஏற்றும் பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டபோது, அந்த சிலாப்பின் மீது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர சிங் (27), நின்று கொண்டு மேலே சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென கிரேனில் இருந்த இரும்பு கம்பி அறுந்த நிலையில் கான்கிரீட் சிலாப் கீழே விழுந்தது.
இதில் நிலை தடுமாறி, சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து தேவேந்திர சிங் உயிரிழந்தார். நசரத்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நடந்து வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள தாகத் தெரிகிறது.