அரூர் பகுதியில் தொடர் கனமழையால் காட்டாறுகளில் வெள்ளம்: கலசப்பாடி மலைக் கிராம மக்கள் பாதிப்பு


அரூர் அடுத்த கலசப்பாடி மலைக் கிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தைக் கடக்க பொக்லைன் வாகனத்தை பயன்படுத்திய மக்கள். | படம்: எஸ்.செந்தில் |

அரூர்: அரூர் பகுதியில் கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக, மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், கலசப்பாடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும், சில பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை மழை பெய்ததில் அதிகபட்சமாக மெனசியில் 22.8 மி.மீ. மழை பெய்துள்ளது. அரூர் 4 ரோடு பகுதியில் 15, அரூர் 13.2, மோளையானூர் 8, வெங்கடசமுத்திரம் 7, கோட்டப்பட்டி 6, பாப்பிரெட்டிப்பட்டி 4.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் முதல் அரூரைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளையொட்டி கனமழை பெய்தது. இதனால் கோட்டப்பட்டி, சித்தேரிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளன.

காட்டாறுகளில் செம்மண் கலந்த வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது. சித்தேரி ஊராட்சி கலசப்பாடிக்கு செல்லும் மண் சாலையின் குறுக்கே ஓடும் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காட்டாற்றை கடக்க முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பொக்லைன் வாகனம் மூலம் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு தங்களது இருசக்கர வாகனம் ஆகியவற்றை கொண்டு செல்கின்றனர். ஒருசிலர் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனத்திலேயே காட்டாற்றை கடக்கின்றனர்.

தொடர்ந்து மழைப் பெய்வதால் காட்டாற்றில் திடீரென வெள்ளம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் ஆற்றை கடக்க அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் கரைப்பகுதியில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. வெள்ள நீர் குறையாததால் பல மணி நேரம் கரையோரத்திலேயே மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து கலசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மணி கூறுகையில், கலசப்பாடிக்கு செல்லும் சாலையை தார்சாலையாக மேம்படுத்த வேண்டும் என்றும் காட்டாறு குறுக்கி்டும் இடத்தில் பாலம் அமைக்க வேண்டும் என்றும் நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல், கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு, தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை தார்சாலை மற்றும் பாலம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மலைக்கிராம மக்கள் நலனுக்காக தார் சாலை, பாலம் அமைக்க வேண்டும், என்றனர்.

x