மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பிரதான கோஷமாகவே வைத்திருக்கிறார். அதை வலியுறுத்தி அறிக்கை மேல் அறிக்கையாக கொடுக்கிறார். ஆளுநரிடம் சென்றும் மனு அளிக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் மிக வலுவாக சொல்கிறார்.
ஆளும் அரசையோ, அதன் முதல்வரையோகூட இத்தனை அழுத்தமாக, தீவிரமாக எதிர்க்காத அண்ணாமலை அதன் ஒரு அங்கமாக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்பதற்கான காரணமும் அதே அளவுக்கு அழுத்தமாகவும் தீவிரமாகவும் இருக்கிறது.
கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலமும் தான் பாஜக வலுவடையும் பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது. அங்கிருந்துதான் அந்த கட்சிக்கு எம்எல்ஏ-க்கள் கிடைத்திருக்கிறார்கள். இங்கெல்லாம் தான் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக கிளைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. கட்சிக்கு இங்கெல்லாம் நல்ல அடித்தளமும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தப்பகுதிகளுக்கு அதிலும் குறிப்பாக கோவைக்கு தீவிர கவனம் கொடுத்து செயல்பட்டு வருகிறார்கள்.
ஆனால் கோவையில், அவர்களின் முயற்சிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் செயல்வேகமும், உயரும் செல்வாக்கும் தங்கள் கட்சியின் வளர்ச்சியை முடக்கிவிடக்கூடும் என்ற அச்சம் பாஜகவினருக்கும் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தனது சொந்த மாவட்டமான கரூரில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் சாதாரண வேட்பாளரை நிறுத்தி தன்னை சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த செந்தில் பாலாஜி, தற்போது தனது தலைமையில் கட்சி வளர்ச்சியடையும் பகுதியான கோவையிலும் தனக்கு குடைச்சல் கொடுப்பது அண்ணாமலைக்கு உறுத்தலாக இருக்கிறது.
ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், செய்ய வேண்டிய வேலைகளை செம்மையாகவே செய்து கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்றியதற்கு காரணம் அவர்தான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியை பெற்றதற்கும் காரணகர்த்தா அவரேதான். கொங்கு மண்டத்தைச் சேர்ந்த பிறகட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து திமுகவுக்குள் ஐக்கியமாகி வருவதற்கும் காரணமும் அவரேதான்.
கொங்கு மண்டலத்தில் வேகமாக வளரத் துடிக்கும் பாஜகவுக்கு முட்டுக்கட்டை போடும் ஒரே சக்தியாக இருப்பதும் செந்தில் பாலாஜிதான். அது ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் அண்ணாமலைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ’ஒத்த ஓட்டு பாஜக’ என்று கிண்டல் செய்யும் அளவுக்கு கொங்கு பெல்ட்டில் பாஜக அடிவாங்கிய நிலையில் இப்படியே போனால் 2024 மற்றும் 2026 தேர்தல்களில் பாஜகவை அந்தப்பகுதியில் இருந்து செந்தில் பாலாஜி மொத்தமாக துடைத்தெறிந்து விடுவாரோ என்ற அச்சம் தமிழக பாஜகவுக்கு வந்திருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பாஜக பெற வேண்டுமானால் அதற்கு செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க வேண்டும், அவரை அந்தக் களத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பது பாஜகவின் முக்கியமான அஜண்டாவாக இருக்கிறது. அதற்கான வேலைகளையே இப்போது பாஜக செய்யத்தொடங்கி இருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அண்ணாமலை அறிவித்திருந்தாலும்கூட கட்சியின் தேசிய தலைமையால் கோவைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், அண்ணாமலையின் தொடர் கோவை விசிட்டுகள் ஆகியவற்றை எல்லாம் வைத்து அங்கு அண்ணாமலை நிற்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவே பாஜகவினர் சொல்கிறார்கள். இந்த நிலையில் அங்கு செந்தில் பாலாஜி தங்களுக்குத் தடையாக இருப்பதை அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சுத்தமாக விரும்பவில்லை. அதனால் அண்ணாமலை செந்தில் பாலாஜியை நேரடியாகவே குறிவைத்துள்ளார் என்கிறார்கள்.
“சாராய அமைச்சர்” என்று விமர்சித்து பேட்டி கொடுக்க ஆரம்பித்த அண்ணாமலை, அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் செந்தில் பாலாஜிக்கு எதிராக தனது போலீஸ் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆதாரங்களை திரட்டினார். விஷச்சாராய மரணங்கள், மதுக்கடையில் அதிக விலைக்கு மது விற்பனை, போலி மது விற்பனை, மதுக்கடைகளில் நேரம் முடிவடைந்த பிறகும் மது விற்பனை என அனைத்தையும் குற்றப்பட்டியலாக திரட்டினார். எங்கெங்கு எவ்வளவு சொத்துகள் இருக்கின்றன, யார் யார் மூலமாக அவருக்கு வருமானம் வருகிறது என்பதும் பட்டியலிடப்பட்டன.
அவை அனைத்தையும் கொடுக்க வேண்டிய இடத்தில் கொண்டுபோய் கொடுத்தார். அதன் அடிப்படையில் வருமான வரி சோதனைகள் வரிசைகட்டின. வருமான வரித்துறை மட்டுமல்லாது, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புக்களும் அடுத்தடுத்து செந்தில் பாலாஜியை குறிவைத்து ஏவப்படலாம், நீதிமன்றங்கள் மூலமும் அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.
செந்தில் பாலாஜியை வீழ்த்திட, பணத்தைக் கொட்டி அட்டகாசமான செயல் திட்டம் ஒன்றையும் அண்ணாமலை வகுத்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்காகவே தனியாகு வார் ரூம் ஒன்றும் செயல்பட ஆரம்பித்திருக்கிறதாம். அணில் விவகாரத்தில் ஆரம்பித்து எங்கு மின்வெட்டு ஏற்பட்டாலும் உடனடியாக அதை சமூக வலைதளங்களில் பதிவிட வைப்பது, டாஸ்மாக் கடைகளுக்கு சென்று ஐந்து ரூபாய், பத்து ரூபாய் அதிகம் வாங்குவதை எதிர்த்துப்பேசி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது, செந்தில் பாலாஜி எப்போதாவது எங்கேயாவது பேசியதை வீடியோக்களாக உருவாக்கி, அதை வலைதளங்களில் பரப்புவது என்று அந்த வார்ரூம் வாசிகள் சிறப்பாக செயல்பட ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. அங்கேயும் அவருக்கு திருகு வலியை உண்டாக்க, ‘விரைவில் ஸ்டாலினை ஓரங்கட்டி விட்டு முதல்வராகிவிடுவார் செந்தில் பாலாஜி, பாஜகவுடன் சேர்ந்து மஹாராஷ்டிரா பாணியில் ஆட்சியை கைப்பற்றுவார்’ என்றெல்லாம் செய்திகளை பரப்புவதும் அண்ணாமலை அமைத்திருக்கும் வார் ரூம் வாசிகளின் வேலைதானாம். இப்படியெல்லாம் செய்திகளைப் பரப்பினால் அதன்மூலம் திமுக தலைமை செந்தில் பாலாஜி மீது கோபம்கொண்டு அவரை ஓரம் கட்டிவிடும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு என்கிறார்கள்.
செந்தில் பாலாஜியை மையமாக வைத்தே தற்போதைய அரசியல் களம் இயங்குவது போல் தோற்றத்தை உண்டாக்கி வருவதும் இந்த வார் ரூம் உபயம்தானாம். மதுக்கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்கச் சொல்லியிருக்கிறார், கள்ளச்சாராய சாவுகளுக்கு இவரே காரணம், தந்தையின் குடிப்பழக்கத்தால் சிறுமி தற்கொலை செய்து கொண்டதற்கு இவரே காரணம், மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தப் போகிறார், 250 கோடியில் வீடு கட்டி வருகிறார், ஒரு வாரத்துக்கும் மேலாக ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்த வருமான வரித்துறை சோதனைகளில் 150 கிலோ தங்கம் கிடைத்தது, என செந்தில் பாலாஜி குறித்த செய்திகளிலேயே தமிழக அரசியல் களம் இயங்கி வருவதை அரசியல் பார்வையாளர்கள் உற்றுக் கவனிக்கிறார்கள்.
அண்ணாமலை நேரடியாக எதிர்ப்பது ஒருபக்கம் என்றால் அவரது இலக்கில் வெற்றிபெற தோதாக அவர்களது கூட்டணிக் கட்சியினரும் தோள் கொடுக்கிறார்கள். அவரது கூட்டணி சகாக்களான பாமக தலைவர் அன்புமணி, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா போன்றவர்களும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று திசைக்கொருவராக குரல் கொடுக்கிறார்கள். வேறொரு பக்கத்தில், சவுக்கு சங்கர் சவுக்கை வீசுகிறார். அவர் மூலமாகவும் செந்தில் பாலாஜியின் செல்வாக்கை நீர்த்துப்போகச் செய்யும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக கடந்த சில தினங்களாக, ‘விரைவில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கப்படுகிறார்’ என்பதான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல்களால் திமுகவில் உள்ள சீனியர் அமைச்சர்கள் சிலர் உள்ளுக்குள் மகிழ்ந்துபோய் உள்ளனர் என்ற தகவலும் வாட்ஸ் அப் வழி மின்னெலெனப் பாய்கிறது. இன்னும் எந்தெந்த வகையிலெல்லாம் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றங்களைச் சுமத்தலாம், களங்கத்தை உண்டாக்கலாம் என்பதையெல்லாம் உற்றுக் கவனித்து அதற்கேற்ப தீட்டங்களை தீட்டிவருகிறது பாஜக முகாம்.
இதுகுறித்து பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமியிடம் பேசினோம். ‘’நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை பகுதியில் மட்டும் தான் திமுக வெற்றி பெற்றதா? நாகர்கோவில், கன்னியாகுமரியிலும் தான் வெற்றி பெற்றது. அப்படியென்றால் தமிழ்நாடு முழுவதும் செந்தில் பாலாஜிக்கு செல்வாக்கு இருக்கிறது என்று அர்த்தமா? அதெல்லாம் ஒன்றும் கிடையாது. அவர்கள் ஆளுங்கட்சி. அந்த அதிகார பலத்தில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அதில் செந்தில் பாலாஜிக்கு எந்தப் பெருமையும் இல்லை.
ஒரு அகில இந்திய கட்சி, இந்தியாவை ஆளுகின்ற கட்சிக்கு ஒரு மாநிலத்தைச் சேர்ந்த கட்சியின் அமைச்சராக இருக்கிறவரெல்லாம் எதிரியா? அவரை ஒருபோதும் பாஜக எதிரியாக எடுத்துக்கொண்டதே கிடையாது. அவருக்காக வார் ரூம் அமைத்து வேலை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் பாஜகவுக்கு கிடையாது. ஆனால், ஒடிசாவில் நடந்த ரயில் விபத்திற்கு மத்திய ரயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் என்று ஒலிக்கும் குரல்களில் இருக்கும் அதே அளவு நியாயம், கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று மாநில அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதிலும் இருக்கிறது. அதைத்தான் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி வருகிறார்.
இதில் திட்டமிட்டு அண்ணாமலை வார் ரூம் அமைத்து அவரைப்பற்றி களங்கம் கற்பிக்கிறார் என்று எப்படிச் சொல்ல முடியும்? அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பே செந்தில் பாலாஜி மீது வழக்குகள் இருக்கின்றன. மொத்தம் 33 வழக்குகள் அவர் மீது இருக்கிறது. அப்படிப்பட்டவரை புனிதராக கருத வேண்டுமா? அவர் அமைச்சராக இருக்கவே தகுதி இல்லாதவர் என்பதைத்தான் எல்லா கட்சிக்காரர்களும் சொல்கிறார்கள். அதனால் அண்ணாமலையும் அவருடைய குற்றங்களை சுட்டிக்காட்டி பதவி விலக வேண்டும் என்கிறார்.
செந்தில் பாலாஜி தவறு செய்திருக்கிறார். அவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கிறார். அதைப்பற்றி அறிந்ததால் ரெய்டு வருகிறது. அப்படி ஐ.டி ரெய்டு வந்ததற்கும் அண்ணாமலை தான் காரணம் என்கிறார்கள். இனி தமிழ்நாட்டில் வெயில் அடித்தாலும் அண்ணாமலை தான் காரணம், மழை பெய்தாலும் அண்ணாமலை தான் காரணம் என்பார்கள் போலிருக்கிறது” என்றார் துரைசாமி.
ஆயிரம் சொன்னாலும் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரின் இப்போதைய இலக்கு. இது அவர்களின் அறிக்கைகள், பேட்டிகள், போராட்டங்கள் மூலம் தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. ஆனால், செந்தில் பாலாஜியை வைத்து திமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த நினைக்கும் அண்ணாமலையின் முயற்சிகளுக்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்!