தமிழகத்துக்கு எதுவுமே கிடைக்காத நிலையில் மத்திய பாஜக அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? - கனிமொழி கேள்வி


பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர்.

திருநெல்வேலி: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி வரவில்லை. தமிழகத்துக்கு எதுவும் கிடைக்காத நிலையில், மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும் என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பினார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள அவரது மணிமண்டபத்தில், ஒண்டிவீரன் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில், தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர்அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது:

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் அருந்ததியருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அருந்ததியருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போதிலும், அந்த வழக்கில் பெரிய வெற்றியைமுதல்வர் பெற்றுக் கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்கும் உழைக்கக்கூடிய அரசாக செயல்பட்டு வருகிறது.

வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் உழைக்கக்கூடிய அரசாக செயல்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக செயல்படுகிறது திராவிட மாடல் ஆட்சி.அருந்ததியருக்கான இடஒதுக்கீட்டை முதல்வர் எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார். இடஒதுக்கீடு என்பது சட்டரீதியான போராட்டத்தின் மூலம்தான் கிடைக்கப் பெற்றுள்ளது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி வரவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களுக்கான நிவாரண நிதி வரவில்லை. தமிழகத்துக்கு எதுவும் கிடைக்காத நிலையில், மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? அனைவரிடமும் எளிமையாக, அன்பாக பழகக் கூடியவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால், மாநில உரிமைக்காகப் போராடும்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியைப்போல் உறுதியாக இருப்பார். இவ்வாறு கனிமொழி கூறினார்.

x