பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டியதால் முக்குலத்தோர் எல்லாம் கோபத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டதால் கடந்த ஆண்டு தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லவில்லை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. முக்குலத்தோர் எல்லாம் தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது மாயை என்று காட்டுவதற்காக இந்த ஆண்டு தனது பரிவாரங்களுடன் பசும்பொன் செல்கிறார் பழனிசாமி.
எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பவர்கள் முக்குலத்தோர் சமூகத்தினர். எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதாவை வழிநடத்துவதில் தொடங்கி அனைவரும் முக்குலத்தோராகவே இருந்தார்கள். அதனால் தங்களுடைய சொந்தக் கட்சியாகவே அதிமுகவை அந்த சமுதாயத்தினர் கருதினார்கள். அப்படிப்பட்டவர்கள் தற்போது அதிமுகவை வழிநடத்தும் பழனிசாமி மீது கோபத்தில் இருக்கிறார்கள்.
அதிமுகவின் பலமே அதன் சாதி வாக்கு வங்கிதான். வடக்கே வன்னியர்கள், மேற்கே கவுண்டர்கள், தெற்கே முக்குலத்தோர் என்ற பலமான வாக்கு வங்கி எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவுக்கு உண்டு. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் தலைமை அதிமுகவின் முகத்தையே மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். எடப்பாடியார் ஆட்சியில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் என கவுண்டர் இனத்தவர்களே அதிமுகவில் கோலோச்சினர். வன்னியர் சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதேசமயம், முக்குலத்தோர் சமூகத்தினர் இரண்டாம்பட்சமாக பார்க்கப்பட்டனர்.
அப்படித்தான் ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோரை பழனிசாமி முகாம் திட்டமிட்டு ஓரங்கட்டியது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொடுத்தார் பழனிசாமி. தேர்தல் நேரத்தில் வாக்கு அரசியலுக்காக அவர் இப்படிச் செய்தாலும் தங்களுக்கான பிரதிநிதிகளை தூக்கியெறிந்ததுடன், தங்களுக்கான இடஒதுக்கீட்டையும் காலி செய்துவிட்டதாக முக்குலத்தோர் சமுதாயம் அப்போது கொதித்தது; பல இடங்களில் அந்தக் கொதிப்பு இன்னும் அடங்காமல் இருக்கிறது. இது எடப்பாடியாருக்கு எதிரான மனநிலையை அந்த சமூகத்து மக்கள் மத்தியில் உரம்போட்டு வளர்த்துக்கொண்டே இருக்கிறது.
முக்குலத்தோருக்குள் கனன்று கொண்டிருக்கும் இந்தக் கோபத் தீயை அணைக்காமல் தென் மாவட்டங்களில் அதிமுகவை கோலோச்ச வைப்பது சிரமம் என்பதை கொஞ்சம் தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. அதனால் தான் கட்சிக்குள் இப்போது முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கி இருக்கிறார்.
முக்குலத்தோர் மண்டலத்தின் தலைநகரான மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு இப்போது முக்கியத்துவம் கூடி இருக்கிறது. அதேபோல் திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், சிவகங்கையில் செந்தில்நாதன், ராமநாதபுரத்தில் முனுசாமி என முக்குலத்தோரை முன்னிலைப்படுத்தி செயல்படத் தொடங்கியுள்ளார் பழனிசாமி. இதேபோல், புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திருச்சியில் முன்னாள் எம்.பி. ப.குமார், தஞ்சாவூர், திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் என முக்குலத்து முகங்களுக்கு முக்கியத்துவம் கூடி இருக்கிறது.
இத்தனையும் செய்திருந்தாலும் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லாமல் ஒதுங்கினால், சாதி அரசியல் சதி செய்து தனது எதிர்காலத்தை சூனியமாக்கி விடுவார்கள். சும்மாவே, “அதிமுகவை கவுண்டர் கட்சி ஆக்கிவிட்டார் பழனிசாமி” என்று தூற்றுபவர்களுக்கு இது இன்னொரு வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதாலேயே இந்த ஆண்டு பசும்பொன் பயணத்தை திட்டமிட்டிருக்கிறார் பழனிசாமி.
ஆனால், பழனிசாமியின் பசும்பொன் பயணம் அவருக்கு பெரிதாக எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்கிறார்கள். தேவருக்கு மரியாதை செலுத்தவரும் பல்லாயிரக் கணக்கானவர் களில் பழனிச்சாமியும் ஒருவர்; அவ்வளவுதான். அதற்காக அவர் பக்கம் சாய்ந்து விடுவோம் என்று அவர் நினைத்தால் அது பகல் கனவு என்கிறார்கள் முக்குலத்து சமூகத்தில் ஒரு தரப்பினர்.
முக்குலத்தோரின் இந்தக் கோபம் தணியாத பட்சத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, சிவகாசி ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் அதிமுக பின்னடைவைச் சந்திக்கும் என்கிறார்கள். தற்போது தென் மாவட்டங்களில் உள்ள 9 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 39 சட்டமன்றத் தொகுதிகளில் 25 திமுக வசம் உள்ளது. 14 மட்டுமே அதிமுக கையில். இந்த 39 தொகுதிகளிலும் தினகரன் மட்டுமே 4 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளார். பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக நின்றே கடந்த தேர்தலில் முக்குலத்தோர் வாக்குகள் மொத்தமாக அதிமுகவுக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஓபிஎஸ் இப்போது பிரிந்து நிற்கிறார். மக்களவைத் தேர்தலில் அவர் டிடிவி.தினகரனுடன் கைகோக்கலாம் என்பதால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சந்தித்த அதே பின்னடைவைத்தான் இம்முறையும் சந்திக்க நேரிடும் என்கிறார்கள்.
பழனிசாமிக்கு எதிரான முக்குலத்தோரின் கோபத்தை திமுக தங்களுக்கு சாதகமாக திருப்ப நினைக்கிறது. அதன் ஒரு அங்கமாகவே முதல்வர் ஸ்டாலின் இம்முறை பசும்பொன் செல்கிறார் என்கிறார்கள்.
எடப்பாடியாரின் பசும்பொன் பயணம் குறித்து ஓபிஎஸ் அணியின் அமைப்புச் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம் பேசினோம். “சுயநலத்தின் மொத்த உருவமான பழனிசாமியின் அரசியல் விளையாட்டுகளை முக்குலத்தோர் சமூக மக்கள் நேரடியாக உணர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதாயத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய பழனிசாமியின் பசும்பொன் பயணத்துக்கான நோக்கத்தையும் முக்குலத்து மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே, பசும்பொன் பயணமாக இருந்தாலும் சரி, வேறு என்ன சித்து விளையாட்டு களைச் செய்தாலும் சரி பழனிசாமி பக்கம் முக்குலத்து மக்கள் திரும்ப மாட்டார்கள். எனவே, பழனிசாமி பசும்பொன் வந்து செல்வதால் எதையும் சாதிக்கப் போவதில்லை” என்றார் அவர்.
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரும், நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ் நம்மிடம் பேசுகையில், “காந்தியின் கல்லறைக்கு கோட்சே வருவதும், கட்டப்பொம்முவின் கயத்தாறுக்கு எட்டப்பன் வருவதும், தியாகமே வடிவான பசும்பொன் சித்தர் நினைவிடத்துக்கு துரோகமே தொழிலான எடப்பாடி வருவதும் ஒன்று தான். முக்குலத்து மக்களின் ஏழாம் படை வீட்டுக்கு வரும் எடப்பாடி முகத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் திரும்பிப்படுத்துக் கொள்ளும் தேவரய்யா ஆன்மா” என்றார்.
போற்றுவோர் போற்ற தூற்றுவோர் தூற்றிக் கொண்டே இருக்கட்டும் என்ற திடமான நம்பிக்கையுடன் பசும்பொன் செல்கிறார் பழனிசாமி. முக்குலத்து மக்கள் அவரை எப்படி வரவேற்கிறார்கள்... அவர் நினைத்தது நடக்கிறதா என்று பார்க்கலாம்!