திருச்சி: விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி காத்திருப்புப் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 2014, 2019ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் விவசாயிகளுக்கு பாஜக அளித்த வாக்குறுதிகளை 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு மே 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் சென்னையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் அல்லது பாரத ஸ்டேட் வங்கி அல்லது சாஸ்திரி பவன் அல்லது தேர்தல் ஆணைய அலுவலகம் அல்லது தலைமை செயலகம் முன்பாக விவசாயிகளுடன் சேர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த போராட்டத்துக்காக செவ்வாய்க்கிழமை இரவு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சென்னைக்கு புறப்பட்டுச் செல்ல இருந்தனர். இந்த நிலையில், திருச்சி, அண்ணாமலை நகர், மலர் சாலையில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டுக்கு நேற்று 10-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, அவர் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாதபடி தடுத்து, வீட்டுக் காவலில் வைத்தனர்.
இதனிடையே இன்று காலை பல்லவன் விரைவு ரயில் மூலம் சென்னைக்கு செல்ல இருந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட 7 விவசாயிகளை போலீஸார் அவரது வீட்டில் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.