சட்டப்பேரவை முற்றுகை எதிரொலி; ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - வண்டலூர் பூங்கா நிர்வாகம் உறுதி


வண்டலூர்: அரசுத் துறையில் 10 ஆண்டுகள்பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றாததால் வண்டலூர் உயரியல் பூங்காவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற நியாயமான‌ கோரிக்கையை வலியுறுத்தி ஏ.ஐ.சி.சி.டி.யு மாநில சிறப்பு தலைவர் சொ.இரணியப்பன்‌ தலைமையில் ஆக. 20-ம் தேதி சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் ‌ நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 5.30.மணி அளவில் காவல் துறையினர் இரணியப்பனின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று காலை 11.30 க்கு உயிரியல் பூங்கா இயக்குநர் ஆஷிஷ் குமார் ஸ்ரீவத்சவாவுடன் பேச்சுவார்த்தைக்கு போலீஸார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் பணி நிரந்தரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனையடுத்து சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் காலையில் கைது செய்யப்பட்ட இரணியப்பனை மாலையில் காவல்துறையினர் விடுவித்தனர்.

x