கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில், சுங்கம் - உக்கடம் புறவழிச்சாலை பிரியும் இடத்திலும், உக்கடம் காவல் நிலையத்துக்கு எதிரிலும், ஆத்துப்பாலம் சுங்கச்சாவடியை கடந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை பிரியும் இடத்திலும் என மூன்று இடங்களில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்காலிக ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலத்தை கடந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை ஆகியவற்றில் ஏறி, இறங்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை மேம்பாலம் கடந்த 9-ம் தேதி பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தற்போது மேம்பாலத்தின் மேல் பகுதி வழித்தடம், கீழ்புற வழித்தடம் ஆகியவற்றில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சுங்கம் புறவழிச்சாலையில் இருந்து உக்கடம் வரும் வாகன ஓட்டிகள் இடதுபுறம் ஆத்துப்பாலம் நோக்கியோ, வலதுபுறம் உக்கடம், ஒப்பணக்கார வீதி நோக்கியோ திரும்பும் பொழுது, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் இருந்தும் வாகனங்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வதால் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் மேற்கண்ட உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் கூட்டாய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் மூன்று இடங்களில் தற்காலிகமாக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறையின் சாலை பாதுகாப்புப் பிரிவு கோட்டப் பொறியாளர் மனுநீதி கூறும்போது, “உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில், சுங்கம் - உக்கடம் புறவழிச்சாலை பிரியும் இடத்திலும், உக்கடம் காவல் நிலையத்துக்கு எதிரிலும், ஆத்துப்பாலம் சுங்கச்சாவடியை கடந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை பிரியும் இடத்திலும் என மூன்று இடங்களில் தற்காலிக ரவுண்டானாக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளன. இதில், சுங்கம் - உக்கடம் புறவழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா முக்கியமானதாகும். இங்கு ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. சோதனை முயற்சிக்கு பிறகு இந்த ரவுண்டானா முறை நிரந்தரமாக்கப்படும்,”என்றார்.