கோவை: பயிர் சேதம் ஏற்படுத்தி வரும் பன்றிகளை சுடுவதற்கான அரசாணையை அரசு விரைவில் வெளியிடும் என்று கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறியுள்ளார்.
தமிழக வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோவை வனக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. மனித-வன உயிரின மோதல் அதிகமுள்ள கோவை மாவட்டத்தில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வனத்துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மல்லிகா மற்றும் உதவி வனப் பாதுகாவலர் விஜயகுமார், வனச்சரகர்கள் திருமுருகன், அருண், சரவணன், ஸ்டாலின், ரஞ்சித், சுசீந்திரகுமார், மனோஜ் மற்றும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சு.பழனிசாமி பேசும்போது, "யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் விவசாய நிலங்களில் புகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு தொகை தேவையில்லை. சிறுதானிய ஆண்டு என மத்திய அரசு அறிவித்தது. வன உயிரின பிரச்சினையால் சிறுதானியங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை.
யானை நடமாட்டத்தைக் கண்டறிய ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்கும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், விவசாயிகள், வனத்துறை அதிகாரிகள் அடங்கிய அனைத்து தரப்புக் கூட்டத்தை நடத்தி தீர்வு காண வேண்டும். ஏற்கெனவே களிறு திட்டம் மூலம் யானை நடமாட்டம் குறித்து தகவல் பரிமாற்றம் இருந்தது. அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
யானை விரட்டுவதில் புதிய தொழில்நுட்ப முறைகளை கையாள வேண்டும். நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள புதர்களை அகற்றினால் அதில் வாழும் பன்றிகள் வனப்பகுதிக்குள் சென்றுவிடும். வனத்துறையில் அதிரடி குழுக்களை ஏற்படுத்தி, போதிய ஆட்களையும், அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும்” என்றார்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கந்தசாமி பேசும்போது, “மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும். மலையோர பகுதிகளை வரையறுத்து கிராமங்கள் முழுவதும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தில் இருக்கக் கூடாது. பட்டியல் 1-ல் வரும் வன உயிரினங்களால் சேதப்படுத்தும் பயிர்களுக்கு நிவாரணத்தை அரசு தர வேண்டும். வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை திருத்த வேண்டும். பன்றிகளை சுடுவதற்கு அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் விவசாயிகள் பேசும்போது, “யானை மற்றும் பன்றி, மான், மயில்களால் சேதப்படுத்தப்படும் பயிர் சேதத்துக்கான இழப்பீட்டு தொகையை அதிகரித்து தர வேண்டும். மின் வேலி சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்த தேவையான கால அவகாசம் வேண்டும்.
வனத்துறை அலுவலகத்தில் மின் வேலி அமைப்பது தொடர்பான மாதிரியை அமைக்க வேண்டும். மின் வேலி அமைக்க அதிக செலவாகிறது. அதற்கான எனர்ஜைசர் கருவியை வனத்துறை பரிந்துரைக்க வேண்டும். மின்வேலி அமைக்க மானியம் பெற்று தர வேண்டும்” என்றனர்.
மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறும்போது, "பயிர் சேதத்திற்கான இழப்பீட்டு தொகை ரூ.1.6 கோடி விரைவில் பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். பயிர் காப்பீட்டை பொருத்தவரையில் சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கமாக இணைந்து விண்ணப்பிக்கும்போது அனைத்து விவசாயிகளும் காப்பீட்டு தொகை பெற முடியும். வனப் பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது பற்றி பரிசீலிக்கப்படும்.
மின்வேலி அமைக்க மானியம் பெற்றுத்தருவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும். கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பன்றிகள் சுடப்படுகின்றன. ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள், விவசாயிகள் குழுவினர் ஆய்வு செய்து கருத்துரு பெறப்பட்டுள்ளது. பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை சுடுவதற்கான அரசாணையை அரசு விரைவில் வெளியிடும்” என்றார்.