வாழ்வாதாரத்தை உறுதி செய்யக் கோரி பழநியில் கொட்டு மழையிலும் வியாபாரிகள் போராட்டம்


வாழ்வாதாரத்தை உறுதி செய்யக்கோரி பழநி பேருந்து நிலையம் அருகே கொட்டும் மழையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழநி: பழநி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யக் கோரி, பழநி பேருந்து நிலையம் அருகே செவ்வாய்கிழமை மாலையில் நடந்த போராட்டத்தில் கொட்டும் மழையிலும் திரளானோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுபாணி சுவாமி மலைக்கோயில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதா கிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் நுழைவதையும், வணிக நோக்கிலான கடைகள் ஏற்படாமல் தடுக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, 152 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. மேலும், கிரிவலப் பாதையில் வணிக நோக்கிலான கடைகள் ஏற்படாமல் தடுக்க தனியார் கடைகளுக்கு முன் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதே போல், தனியார் வாகனங்கள் நுழைய தடை விதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து, கடந்த ஜூலை 13-ம் தேதி ஒரு நாள் பழநி நகரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, என் மண், என் உரிமை எனும் பெயரில் பழநி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யக்கோரி, ஆக.13-ம் தேதி அடிவாரம் பகுதி மக்கள், வியாபாரிகள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை பழநி பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திரளான வியாபாரிகள், பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

x