மதுரை: சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் கிரிண்டர் ஹே ஆப் பாலியல் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த மகாராஜா, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், "கிரிண்டர் ஹே செயலியை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக என்னை போலீஸார் கடந்த ஜூலை 3ல் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் என உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், “மனுதாரர் செல்போனில் கிரிண்டர் ஹே எனும் ஓரினச் சேர்க்கை செயலியை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனுதாரர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது. ஜாமீன் வழங்கக்கூடாது" என்றார்.
இதையடுத்து நீதிபதி, "மனுதாரர் மீது கிரிண்டர் ஹே ஆப் எனும் மொபைல் செயலி மூலம் ஓரினச் சேர்கையாளர்களை தொடர்பு கிரெடிட் கார்ட், செல்போன் மற்றும் பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார் என்றும், மொபைலில் உள்ள செயலி குறித்த விபரங்களை காவல்துறையிடம் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. போலீஸார் கிரிண்டர் ஹே ஆப் செயலி வழியாக சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.