அணுகுசாலை அமைக்க கோரிக்கை: கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டம்


கோவில்பட்டி: ரயில்வே சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கும் பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக ஆக்கிரமிப்புகள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்க வலியுறுத்தி மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலை பகுதியில் இருப்புப்பாதை கடக்கும் பகுதியில் ரூ.13 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சுரங்கப்பாதையின் இரு புறமும் அணுகு சாலை அமைக்கப்படாததால், அப்பகுதியில் உள்ள ஜமீன்பேட்டைத் தெரு, பெரியார் தெரு, கோபால்செட்டி தெரு, நடராஜபுரம் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் வர முடியாது. அங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகளைச் சேர்ந்த மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சுரங்கப் பாதையில் இருபுறமும் 5.5 மீட்டர் அளவில் அணுகு சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. ஆனால் அப்பகுதியில் உள்ள கடைகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தை நாடியதால் பணிகள் கிடப்பில் கிடந்தன. இந்நிலையில் கடந்த 9ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத்துறை (நபார்டு), காவல் துறை மற்றும் வருவாய்த்துறை நெடுஞ்சாலைத்துறையினர் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுடன் வந்திருந்தனர்.

அப்போது அதிகாரிகளுக்கும் அந்த பகுதி வணிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை 3 முறை மறியல் போராட்டங்கள் நடந்தன. மாலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இளையரசனேந்தல் சாலையில் வணிக நிறுவனங்கள் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் தாங்களாகவே முன் வந்து காலி செய்து விடுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்றுள்ளன. அதனால் 16ம் தேதிக்கு பின்னர் ஆக்கிரமிப்புகள் மற்றும் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

ஆனால், ஆகஸ்ட் 20ம் தேதி ஆகியும் ஆக்கிரமிப்புகள், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறாததால், அப்பகுதி மக்கள் 15வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மணிமாலா தலைமையில் இன்று காலை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் 5ம் தூண் அமைப்பு நிறுவனர் சங்கரலிங்கம், மதிமுக நகரச் செயலாளர் பால்ராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஆக்கிரமிப்புகள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மக்கள் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினி, தலைமை எழுத்தாளர் அறிவழகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், அவர்கள் செப்டம்பர் 11ம் தேதி வரை உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளதால் தற்போது பணிகள் மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாலை சுமார் 3 மணிக்கு அவர்கள் கலைந்து சென்றனர். கோவில்பட்டியில் ரயில்வே சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக ஆக்கிரமிப்புகள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்க வலியுறுத்தி மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

x