பிரேமலதா, தமிழிசை உட்பட 3 தலைவர்களுக்கான போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: காரணம் இதுதான்!


சென்னை: தமிழகத்தில் தமிழிசை சௌந்தரராஜன், பிரேமலதா விஜயகாந்த், செல்வப்பெருந்தகை ஆகிய மூன்று அரசியல் தலைவர்களின் வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக போலீஸார் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். இவர்களது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அரசியல் முக்கியத்துவம், அச்சுறுத்தல், தனிப்பட்ட கோரிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு அளிக்கப்படும். ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறையும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தெலங்கானா ஆளுநராகவும், புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அது போல் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கேட்டுக்கொண்டதால், அவரது வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தற்போது இவர்கள் 3 பேரின் வீட்டிற்கும் வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்பட்சத்தில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x