சட்டப்பேரவை தேர்தலில் மட்டும் போட்டி என்பது என்ன வகையான நியாயம் என இயக்குநர் அமீர், விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர்களில் நம்பர் 1 ஆக இருப்பவரும், தென்னிந்திய திரைத்துறையில் அதிக சம்பளம் வாங்கக் கூடியவருமாக இருப்பவர் நடிகர் விஜய். நீண்ட காலமாக இவர் அரசியலுக்கு வருவார் என பலரும் கூறி வந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். இவை எல்லாம் அவர் அரசியலுக்கு தயாராகிவிட்டார் என்பதை உணர்த்துவதாகவே பலரும் கூறிவந்தனர்.
இந்த சூழலில், கடந்த 2ம் தேதி அவர்தான் கட்சி தொடங்கியதை அறிவித்தார். அதற்கு தமிழக வெற்றி கழகம் என்றும் பெயர் வைத்துள்ளார். அவருக்கு அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், பலர் அவரது கொள்ளை என்ன? அவரது அரசியல் நிலைப்பாடு என்ன என விமர்சனமும் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இயக்குநரும், நடிகருமான அமீர் விஜய் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
தனியார் யூடியூப் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அமீர், விஜயின் அறிக்கையே பலர் ஏற்கனவே கூறிய, கருத்துக்களின் கலவையாக உள்ளது என்று கூறியுள்ளார். “தமிழ்நாடா, தமிழகமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது, மாநிலத்தை தமிழ்நாடு என கூறுவதற்கு பின்னனியில் ஒரு அரசியல் உள்ளது. இந்த சூழலில் அவர் தமிழகம் என பெயர் வைத்ததன் மூலம் எதிர்கால தலைமுறைக்கு என்ன சொல்ல வருகிறார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “ஒரு சினிமா போஸ்டரிலேயே பல குறியீடுகளை கண்டுபிடிக்கும் காலம் இது. ஒரு சினிமாவுக்கே இவ்வளவு ஆராயும் போது, அரசியல் கட்சியின் லெட்டர் பேடுக்கு எவ்வளவு ஆராய வேண்டும். சாதி, மத பேதமற்ற அரசியல் என விஜய் கூறுகிறார். அப்படி என்றால் நாடாளுமன்ற தேர்தலில் அவருடைய நிலைப்பாட்டை அறிவித்திருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை என்பதா ஒரு தலைவனுக்கு அழகு?. மத்தியில் வரும் அரசை பொறுத்து தானே மாநிலத்தில் ஆள முடியும். நாட்டை யாரு வேண்டுமாலும் ஆளுங்கள், மாநிலத்தை நான் ஆள்கிறேன் என சொல்வது என்ன வகையான நியாயம்” என அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.