குமரி கடலில் தாழ்வான நீர்மட்டத்தால் படகு சேவை பாதிப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்


கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வால் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து இரண்டரை மணிநேரம் தாமதமாக துவங்கியது. இதற்காகாக படகு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை.

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடலில் தாழ்வான நீர்மட்டம் காரணமாக படகு சேவை இரண்டரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக கடலில் பயணம் மேற்கொண்டு கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வருவது உள்ளது. தற்போது இருபாறை இடையேயும் கண்ணாடி இழைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் படகு சேவை நடந்து வருகிறது. இங்கும் கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு போன்ற இயற்கை இடரின்போது படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதும், கடல்நிலை சீரமான பின்னர் தாமதமாக படகு போக்குவரத்து துவங்குவதும் நடந்து வருகிறது.

இந்நேரங்களில் படகு சவாரிக்காக காத்து நிற்கும் சுற்றுலாப் பயணிகள் பாதிப்படைவர். இந்நிலையில் இன்று காலையில் இருந்து கடல் நீர்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் படகு இல்ல நுழைவு வாயிலில் படகு சேவை தாமதமாக துவங்கும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

வழக்கமாக காலை 8 மணிக்கு துவங்கும் படகு சேவை காலை 10.30 மணிக்கு துவங்கியது. இரண்டரை மணி நேரம் தாமதமாக படகு சேவை விவேகானந்தர் பாறைக்கு துவங்கியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

x