அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கக்கோரி ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் தொடர் உண்ணாவிரதம்: துரை வைகோ நேரில் ஆதரவு


சென்னை: ஆம் ஆத்மி தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கக் கோரி அக்கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் 5வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

மேடையில் துரை வைகோ பேசியதாவது: "தொடர்ந்து மூன்று முறை டெல்லியில் ஆட்சி அமைத்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். அரசியலில் என்னை மிகவும் கவர்ந்தவர் அவர். தனக்கு அரசியலும், அரசியல்வாதிகளையும் பிடிக்காது என பலமுறை கூறியிருக்கிறேன். மதிமுக, வைகோ போன்ற சூழல் இல்லாமல் இருந்து, தான் அரசியலுக்கு வந்திருந்தால் ஆம் ஆத்மி நிர்வாகிகளுடன் இருந்திருப்பேன்.

தமிழக ஆம் ஆத்மி தலைவர் வசீகரனுடன் இணைந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பேன். ஏனெனில், கொள்கை ரீதியாக ஆம் ஆத்மிக்கும், மதிமுகவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது. அடித்தட்டு மக்களின் துயரங்களை துடைப்பதற்காகவும், ஊழலை ஒழிப்பதற்காகவுமே வைகோவும், இருக்கின்றனர்.

இந்நிலையில், கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கட்சியை முடக்கலாம் என்ற வன்மத்தில் பாஜக அரசு செயல்படுகிறது. இதுகுறித்து பாஜக அல்லாத அனைத்து கட்சியினரும் கவலைப்படுகின்றனர். ஜனநாயக முறையில் உண்ணாவிரதத்தை வரவேற்கும் அதே நேரம், வசீகரனை போன்றவர்களை இழக்க முடியாது.

எனவே, உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன். லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வர முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 10 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர். ஆனால், அப்போது அவரது உடல்நிலை வேறு. மேலும், ரத்த அழுத்தம் போன்றவற்றை 3, 4 முறை பரிசோதிக்கவும், ஒரு மருத்துவரை உடன் வைத்திருக்க வேண்டும் என வசீகரனை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு முதல்வராக கைதானவர் அரவிந்த் கெஜ்ரிவால் தான். இது பிற மாநில முதல்வர்களுக்கும் நடக்கலாம். இதை அனைத்து கட்சித் தலைவர்களும் உணர்ந்து உண்ணாவிரதத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். சர்வாதிகார போக்கை கண்டித்ததாலேயே கெஜ்ரிவால் சிறையில் இருக்கிறார். இது மக்களின் பிரச்சினை. ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால். அறப் போராட்டத்தில் மதிமுக தோளோடு தோள் நிற்கும்” என்றார்.

"கொள்கை ரீதியாக வேறுபடலாம். தமிழகத்துக்கான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. திராவிட கொள்கைக்கும், சமூக நீதி கொள்கைக்கு பாஜகவினர் எதிரானவர்கள். ஆனால் கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்களும் கருணாநிதி போன்றவர்களை பாராட்டுகின்றனர் என்றால் அது நமக்கு கிடைத்த பெருமை. இதை அரசியலாக்குகின்றனர்.

நாணயத்தை மத்திய அரசால் மட்டுமே வெளியிட முடியும். அவ்வாறு உலகளவில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பை நாணய வெளியீட்டு நிகழ்ச்சி கொண்டு சென்றதாகவே நான் பார்க்கிறேன். சாதிய வன்மம் இருக்கும் சூழலில், எப்படி பட்டியலினத்தவரை முதல்வராக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற வருத்தத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பார். ஆனால் காலம் மாறும்" என்று தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துரை வைகோ பதில் அளித்து பேசினார்.

x