திருச்சி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மின் ஊழியர்கள் போராட்டம்


திருச்சி: தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மாநகர தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வாயிற் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

"தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல ஆண்டுகளாக ஊதியம் இல்லாமல் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக் கூலி வழங்க வேண்டும். பிரிவுக்கு இருவரை ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து நேரடியாக கூலி வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு சங்க வட்டத்தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ரங்கராஜன் தொடக்க உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சங்க வட்டச் செயலாளர் பழனியாண்டி, வட்டப் பொருளாளர் இருதயராஜ், வட்ட துணைத் தலைவர் செல்வராஜ், கோட்டச் செயலாளர்கள் ராதா, நாகராஜ், ரியாசுதீன், ரவிச்சந்திரன், செல்வம், மணிகண்டன், சிஐடியு புறநகர் மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினர். இந்த போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

x