சோ ராமசாமியின் மனைவி காலமானார் - அரசியல் கட்சியினர் இரங்கல்


சென்னை: மறைந்த நடிகரும், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியருமான சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி காலமானார்.

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அரசியலை நகைச்சுவையுடன் நையாண்டி செய்யும் வசனங்கள் மூலமாக பிரபலமானவர் சோ ராமசாமி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த அவர், அரசியல் ரீதியாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராகவும், அரசியல் விமர்சகராகவும், துக்ளக் பத்திரிகையின் நிறுவன ஆசிரியராகவும் இருந்த சோ ராமசாமி கடந்த 2016ம் ஆண்டு காலமானார்.

இதன்பின்னர் அவருடைய மனைவி சௌந்தரா ராமசாமி(84) , குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சௌந்தரா ராமசாமி நேற்றிரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறைந்த சோ ராமசாமி - சௌந்தரா ராமசாமி தம்பதிக்கு ஸ்ரீராம் என்கிற மகனும், சிந்துஜா என்கிற மகளும் உள்ளனர். நாளை ( ஆகஸ்டு 21) சௌந்தரா ராமசாமியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

x