மதுரை: மதுரையில் 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஆண்டுக்கணக்கில் உரிமை கோரப்படாமல் விடப்பட்ட பறிமுதல் வாகனங்களால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மதுரை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவைத் தலைவர் சி.ராஜேந்திரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ''மதுரை மாநகரில் மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடும் போது வரி செலுத்தாத வாகனங்கள், அனுமதிச்சீட்டு புதுப்பிக்காத வாகனங்கள், பதிவு ஆவணங்கள் முறையாக பராமரிக்காத வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். பின்னர் வாகன உரிமையாளர்கள் அபராதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு வாகனங்களை விடுவிக்கின்றனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் உரிமையாளர்களால் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கும் போது அந்த வாகனங்கள் ஆண்டு கணக்கில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அருகே அப்படியே போட்டு வைக்கப்படுகின்றன. இந்த வாகனங்களிலிருந்து எஞ்சின் மற்றும் முக்கிய உதிரி பாகங்கள் திருடப்படுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக உதிரி பாகங்கள் திருடப்பட்ட நிலையில் இறுதியில் அந்த வாகனங்கள் வெற்று இரும்பு கூடுகளாக நிற்கின்றன.
இதுபோன்ற வாகனங்களை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாவட்ட மோட்டார் வாகன பராமரிப்பு பணிமனையில் ஒப்படைத்து, பின்னர் குறிப்பிட்ட காலத்தில் இரும்புக்காக ஏலத்தில் விடும் நடைமுறை உள்ளது. இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கழிவுக்குப்பைகளாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.