நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு - 10,000 மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்கச் செல்லவில்லை


பிரதிநிதித்துவப் படம்

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் மிதமான மழை நீடித்தது. மாவட்டத் திலுள்ள கடலோர கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் நேற்று 4-வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 2, சேரன்மகாதேவி- 2.40, மணிமுத்தாறு- 4.80, பாபநாசம்- 4, ராதாபுரம்- 6, சேர்வலாறு அணை- 1, கன்னடியன் அணைக்கட்டு- 9.80, களக்காடு- 1.60, மாஞ்சோலை - 5, காக்காச்சி- 7, நாலுமுக்கு- 11, ஊத்து- 10. மொத்தம்- 64.60. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 51.10அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 223 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 254 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம்85.20 அடியாக இருந்தது. அணைக்கு 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், 245 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்று 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதாலும், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடந்த 4 நாட்களுக்கு முன் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நேற்று 4-வது நாளாக மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல் ,இடிந்தகரை ,உவரி, கூத்தன் குழி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள 10 ஆயிரம் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை . இதனால் 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்த நிலையில் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாததால் தற்போது மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மழையின் தீவிரம் குறைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் தென்காசியில் 11 மி.மீ., ஆய்க்குடியில் 5 , செங்கோட்டையில் 4.60, குண்டாறு அணையில் 4, கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 2, கருப்பாநதி அணை, சிவகிரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

தொடர்ந்து மழை பெய்தாலும் கடனாநதி, ராமநதி, அடவிநயினார் அணைகளுக்கு மட்டும் குறைவான அளவில் தண்ணீர் வந்தது. கருப்பாநதி, குண்டாறு அணைகளுக்கு நீர் வரத்து ஏற்படவில்லை. தென்மேற்கு பருவமழை தொடங்கினால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்தாலும் மழை எச்சரிக்கை காரணமாக அருவிகளில் குளிக்க நேற்றும் தடை நீடித்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

x