தமிழ்நாட்டில் உளவுத்துறையின் செயல்பாடு கேள்விக்குறி - ஜி.கே.வாசன் பாய்ச்சல்!


கோவை விமான நிலையத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

தமிழ்நாட்டில் உளவுத்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாகி இருப்பதாகவும், மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய கடமை அரசுக்கு இருப்பதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது. குடியரசு தலைவர் சென்னை வரக்கூடிய சில மணி நேரங்களில், அதுவும் அவர் தங்க கூடிய இடத்தில், பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதால் சாதாரண மனிதர்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தினுடைய பாதுகாப்பு, குறிப்பாக உளவுத்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது. மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். அந்த கடமை அரசுக்கு உண்டு. இந்த சம்பவத்தை ஆழமாக விசாரிக்க வேண்டும். அதன் நோக்கம் என்ன என்று மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை. ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் முதலில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். முக்கிய பிரச்சினை என்ன? என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்றார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

பெட்ரோல் குண்டு வீசியவரை முந்தைய வழக்கில் பாஜகவை சார்ந்த வழக்கறிஞர் பிணையில் எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பான கேள்விக்கு, பொய்யான தகவல்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து விசாரித்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் கடின உழைப்பால் உயர்ந்து மற்ற மாநில மாணவர்களுக்கு சவாலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்றவாறு நீட் தேர்வு சதவீதம் உயர்ந்து வருகிறது. தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் பெற்றோர்களையும், மாணவர்களையும் மீண்டும் நீட் தேர்வு என்ற பெயரில் குழப்ப வேண்டாம். கையெழுத்து இயக்கம் நடத்துவது என்பது மாணவர்கள் படிப்பில் இடையூறு ஏற்படுத்துகின்ற செயல்.

ஜி.கே.வாசன் பேட்டி

பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் கல்வி பயிலும் போது அதற்கு இடையூறாக இருக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்துவது தேவையற்றது. திமுகவிற்கு உண்மையில் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று நினைத்தால் சட்ட ரீதியாக செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசியல் ரீதியாக எடுத்துக்கொண்டு மாணவர்கள், பெற்றோர்களை குழப்புவது ஒருபோதும் சரியல்ல. திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தினால் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் வளரக்கூடாது, அதை முடக்க வேண்டும் என்ற நிலையில் காவல்துறை உதவியுடன் எதிர்க்கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்றி வருகிறது.

ஜி.கே.வாசன்

சிறுபான்மையின மக்கள் விடுதலை செய்யக்கூடிய நிலையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. மக்கள் மன்றத்தில் ஒரு பேச்சும், நீதிமன்றத்தில் ஒரு பேச்சும் என்பது அவர்களுடைய உண்மையான முகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்'' என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...


வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை

நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!

x