கொடைக்கானல், பழநியில் பலத்த மழை!


கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் ஏரிச்சாலையில் சாய்ந்து விழுந்த மரம்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் ஏரிச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதலே மிதமான வெப்பம் நிலவியது.

பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 வரை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில், கொடைக்கானல் ஏரிச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மரத்தை வெட்டி அகற்றியதும் போக்குவரத்து சீரானது. பலத்த மழையால் கொடைக்கானல் நகர் முழுவதும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மாலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மழையால் இரவில் கடும் குளிர் நிலவியது. இதே போல், பழநி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று பிற்பகல் கன மழை பெய்தது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கொடைக்கானலில் பெய்த மழையால் பழநியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஒட்டன்சத்திரம் பகுதியிலும் பிற்பகலுக்கு பின் விட்டு விட்டு சாரல் மழை நீடித்தது.

x